பள்ளிக்கூடத்தில் சமையலுக்காக தண்ணீர் குடங்களை சுமந்து செல்லும் மாணவிகள் மலைவாழ் குழந்தைகளின் கல்வி பாழாகிறது
பள்ளிக்கூடத்தில் சமையலுக்காக தண்ணீர் குடங்களை மாணவிகள் சுமந்து செல்கிறாா்கள். இதனால் அவா்களது கல்வி பாழாகிறது.
தமிழகத்தில் உள்ள மலைபிரதேசங்களில் வெவ்வேறு கலாசார சூழலில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு எழுத்தறிவு என்பது குறைவே. இதனால் மழைவாழ் மக்கள், பிழைப்பு தேடி சமவெளி பகுதிக்கு சென்று வருவார்கள்.
அவ்வாறு செல்லும் போது, தங்களது குழந்தைகளையும் தங்களுடன் அழைத்து சென்று விடுகிறார்கள். இதனால், மலை கிராம குழந்தைகளுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகும் நிலை உருவானது.
அழிவில்லா செல்வம்
கல்வி தான் ஒருவரின் நிலையான அழிவில்லா செல்வமாகும். அந்த செல்வம் மலைவாழ் குழந்தைகளுக்கும் கிடைத்து, வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக மலைபிரதேசங்களில் அரசு மலைவாழ் உண்டு உறைவிட பள்ளிகளை நடத்தி வருகிறது.
ஆனால், அந்த பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஏற்றவகையில் கற்றல், கற்பித்தல் முறை பின்பற்றப்படுகிறதா என்பதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க தவறிவிடுகிறார்கள்.
ஆகையால், அந்த பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை அங்கு பணிபுரியும் சிலர் தங்களது சொந்த வேலைக்காக பயன்படுத்தி, அவர்களது கல்வியை குழந்தை பருவத்தில் இருந்தே பாழாக்கி, கல்வி செல்வம் கிடைக்காமல் தடுக்க முட்டுக்கட்டை போடுகிறார்கள். அதுபோன்ற நிலைதான் கல்வராயன்மலையிலும் அரங்கேறி உள்ளது.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
200 மாணவர்கள் படிக்கிறார்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ளது பொட்டியம் கிராமம். இங்கு அரசு மலைவாழ் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு பொட்டியம், மாயம்பாடி, கோட்டக்கரை, பன்னிப்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
வீடியோ வெளியானது
இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இங்கேயே உணவு சமைத்து தரப்பட்டு வருகிறது. ஆனால் தங்களுக்கான உணவை சமைக்க, மாணவிகள்தான் வேலை பார்க்க வேண்டிய நிலை இருக்கிறது.
அதாவது, பள்ளியில் சமையல் செய்யும் ஊழியர்கள், மாணவிகளிடம் குடங்களை கொடுத்து அனுப்பி தண்ணீர் பிடித்து வர சொல்லிவிடுகிறார்கள். அந்த சின்னஞ்சிறு மாணவிகளும் தங்களது பிஞ்சு கரங்களால் கைப்பம்பில் (அடிபம்பு) 3 குடங்களில் தண்ணீர் அடித்து, அதை பள்ளிக்கூடத்துக்கு சுமந்து செல்கிறார்கள். இதுபோன்ற வீடியோ ஒன்று தான் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
தண்ணீர் குடத்தை சுமந்து செல்கிறார்கள்
பள்ளியில் பேனா பிடித்து எழுதி பழக வேண்டிய அந்த கைகளால் கைப்பம்பில் மாணவிகள் தண்ணீர் அடிப்பதும், தண்ணீர் குடத்தை தங்களது தலை மீது வைத்து கொண்டு தலை அங்கும், இங்கும் நடுங்கும் விதமாக அசைந்து செல்வதும், ஒரு மாணவி தனது இடுப்பில் வைத்து சுமந்து செல்வதையும் அந்த வீடியோ பதிவில் பார்க்கையில், அத்தனை இரக்கமற்றவர்களாக இருக்கிறார்களா? அந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் சமையலர்கள் என்கிற கேள்வி அனைவருக்கும் எழுகிறது.
உடனடி நடவடிக்கை தேவை
மலைவாழ் மக்கள் 100 சதவீதம் கல்வியில் வளர்ச்சி பெற்று உயர் கல்வி கற்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கமாக இருக்கிறது. ஆனால் இதுபோன்ற ஒருசிலரின் செயல்பாடு தான் பள்ளி இடைநிற்றல், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறை ஆகியவற்றை பெருக்குவதற்கு அடித்தளமாக அமைந்து விடுகிறது. ஆகவே இதை முளையிலேயே கிள்ளியேறிய வேண்டும்.
இல்லையெனில், மலைவாழ் குழந்தைகளுக்கு சமவெளி பகுதியில் 1-ம் வகுப்பில் ஒரு குழந்தை பயிலும் கல்வி கூட அவர்களுக்க கிடைக்காமல் போய்விடும்.
ஆகையால் மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு, மலைவாழ் குழந்தைகளின் கல்விக்கு தரமான அடித்தளம் அமைத்து கொடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.