கல்வி தொலைக்காட்சி கைகொடுக்கிறதா?-ஆசிரியர், மாணவர்கள் கருத்து


கல்வி தொலைக்காட்சி கைகொடுக்கிறதா?-ஆசிரியர், மாணவர்கள் கருத்து
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கொரோனா காலத்தில் கைகொடுத்த கல்வி தொலைக்காட்சியின் தற்போதைய செயல்பாடுகள் பயன் தருவதாய் உள்ளதா? என்பது குறித்து ஆசிரியர், பெற்றோர், மாணவர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

கல்வி தொலைக்காட்சி

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையால் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக தொடங்கப்பட்டதுதான் கல்வி தொலைக்காட்சி. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி, இந்த கல்வி தொலைக்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது.

முதலில் சில குறிப்பிட்ட பாடங்கள் மாணவ-மாணவிகளுக்கு வீடியோவாக பதிவிடப்பட்டு, ஒளிபரப்பப்பட்டு வந்தன. அதனைத்தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நேரத்தில், கல்வி தொலைக்காட்சி அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேருதவியாக இருந்தது.

அந்த காலகட்டத்தில் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் ஆன்லைன் வாயிலாக தங்களது கற்றலை வலுப்படுத்தி வந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு கல்வி தொலைக்காட்சி தான். அதன் வாயிலாகவும், கல்வித்துறையின் சீரிய முயற்சியாலும் மாணவர்களின் கற்றல் ஓரளவுக்கு தாக்குப்பிடித்தது.

செயல்பாடுகளில் மாற்றம்

ஆரம்பத்தில் 2 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் ஆசிரியர்களை கொண்டு வீடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஒளிபரப்பப்பட்டன. சனிக்கிழமைகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பயிற்சி வினாக்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் இசை, மனநல ஆலோசனை உள்பட துணைக்கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்பட்டன. இதன் மூலம் பள்ளி மாணவர்கள் பயன் அடைந்ததையும் பார்க்க முடிந்தது.

தொலைக்காட்சி வாயிலாக மட்டுமல்ல, அதில் ஒளிபரப்பாகும் வீடியோக்கள் கல்வித் தொலைக்காட்சி யூ-டியூப் வாயிலாக அதற்கு மறுநாள் பார்க்கும் வகையில் பதிவேற்றமும் செய்யப்பட்டன. கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த காலம் வரை கல்வி தொலைக்காட்சி மூலம் இதுபோன்ற நிகழ்வுகள் மாணவ-மாணவிகளுக்கு தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன. அதன்பின்னர், நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டதும், கல்வி தொலைக்காட்சியின் செயல்பாடுகளில் சற்று மாற்றம் கொண்டு வரப்பட்டது.

பயனுள்ளதாக உள்ளதா?

அதன்படி, தற்போது கல்வி தொலைக்காட்சியில் கொரோனா காலத்தில் வெளியிடப்பட்டது போன்ற பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியிடுவது குறைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு மாற்றாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்த எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வித்திட்டம் தொடர்பான வீடியோக்களும், காலை மற்றும் மாலையில் வேலைவாய்ப்பு தொடர்பான வீடியோக்களும், இதை தவிர மற்ற நேரங்களில் பாடங்கள் குறித்த வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இதுதான் கல்வி தொலைக்காட்சியின் தற்போதைய செயல்பாடுகளாக இருக்கிறது. இருப்பினும், கல்வி தொலைக்காட்சி கொண்டு வந்ததன் நோக்கம் நிறைவேறும் வகையில் அதன் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இருந்தாலும் கல்வி தொலைக்காட்சியின் தற்போதைய செயல்பாடுகள் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா? அதை மேலும் எவ்வாறு மேம்படுத்துவது? என்பது குறித்து ஆசிரியர், பெற்றோர் மற்றும் மாணவ-மாணவிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதன் விவரம்வருமாறு:-

பெரிய பலம்

ஓசூர் சிப்காட் பேடரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன் நாகேஷ் கூறியதாவது:- மாணவர்கள் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தில் பயனுள்ள நிகழ்ச்சிகளை அளிக்க தமிழக அரசு தொடங்கியது தான் கல்வி தொலைக்காட்சி. கல்வி தொலைக்காட்சி கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு பயனுள்ள கற்றல் கருவியாக அமைந்தது. இந்த தொலைக்காட்சி வகுப்பறைக்கு வெளியில் கற்றலுக்கான வாய்ப்பை மாணவ-மாணவிகளுக்கு உருவாக்குகிறது. மாணவர்கள் கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி மகிழ்ச்சியோடு கற்று கொள்வதற்கும், படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில்உள்ளது

கொரோனா காலத்தில் மாணவர்களின் கற்றல் எந்தவித தடையும் இன்றி தொடர கல்வி தொலைக்காட்சி பெரிய பலமாக அமைந்தது. தற்போது நேரடி வகுப்புகள் இருந்தாலும், கல்வி தொலைக்காட்சி மூலமாக நடத்தப்படும் பாடங்கள் மூலம் மாணவ, மாணவிகள் பயன் அடைந்து வருகிறார்கள். மேலும் ஆசிரியர்களும் அதை மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி பார்க்க கூறுகிறார்கள்.

பயனுள்ள வகையில்...

பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி மாணவி ஷாபியா கூறியதாவது:-

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் கற்றலை மேம்படுத்தவும், தகவலை எளிதில் கொண்டு சேர்க்கும் விதமாகவும் கல்வி தொலைக்காட்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பப்படுகிறது. கொரோனா காலத்தில் எங்கள் ஆசிரியர்கள் மூலம் நிகழ்ச்சி நிரல்கள் அனுப்பப்பட்டு அதை நாங்கள் தினமும் கண்டு பாடக்கருத்துக்களை எளிதில் புரிந்த கொள்ள ஏதுவாக கல்வி தொலைக்காட்சி இருந்தது. இதனால் எங்களது கற்றல் திறன் தடைபடாமல் இருந்தது. தற்போதும் பயனுள்ள வகையில் கல்வி தொலைக்காட்சி உள்ளது.

கைகொடுத்தது

தேன்கனிக்கோட்டை அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவி தவஸ்ரீ கூறியதாவது:-

எங்கள் பகுதி மலை கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்ட காலத்தில் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். அந்த கால கட்டத்தில் கல்வி தொலைக்காட்சி எங்களுக்கு மிகவும் கைகொடுத்தது. தற்போதும் அதை பார்த்து பாடங்கள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் ஆசிரிய, ஆசிரியைகளும் பாடங்கள் தொடர்பாக வீடியோக்கள், பதிவுகளை எங்களுக்கு அனுப்பி உதவுகிறார்கள்.

தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்தமாணவர் சந்தோஷ் கூறியதாவது:-

கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனா காலத்தில் கல்வி தொலைக்காட்சி மிகவும் பயனாக இருந்தது. அப்போது பாடங்களை நான் தொலைக்காட்சி மூலமாக பார்த்து படித்து கொண்டேன். தற்போது நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. ஆனாலும் கல்வி தொலைக்காட்சியில் வரும் பாடங்களையும், அது தொடர்பாக வீடியோக்களையும் பார்த்து வருகிறோம். சமீபத்தில் காலாண்டு விடுமுறை வந்தது. அப்போது கூட நான் கல்வி தொலைக்காட்சி வீடியோக்களை பார்த்து பாடங்களை படித்து கொண்டேன்.

சில மாற்றங்கள்

வேப்பனப்பள்ளி அருகே காரகுப்பத்தை சேர்ந்த இல்லத்தரசி சித்ரா கூறியதாவது:-

கல்வி தொலைக்காட்சி அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பயனாக உள்ளது. அதில் கூடுதலாக மேலும் தகவல்களை அளித்தால் இன்னும் மாணவ, மாணவிகள் பயன் பெறுவார்கள். சில நிகழ்வுகளை படைப்புகளாக செய்து காட்டி அதை மாணவர்களும் ஒரு முறை செய்து பாருங்கள் என ஊக்கப்படுத்திட வேண்டும். அவ்வாறு செய்யும் போது மாணவர்களின் மனதில் அந்த பாடங்கள் ஆழமாக பதியும். மறக்காது. எனவே இன்றைய தலைமுறையினரின் தேவைகளுக்கு ஏற்க கல்வி தொலைக்காட்சியில் சில மாற்றங்கள் தந்து ஒளிபரப்பினால் மிகவும் பயனாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

எதிர்பார்த்த அளவு இல்லை

சில தனியார் பள்ளி முதல்வர்களை சந்தித்து இதுபற்றி கேட்டபோது, 'அரசின் இந்த திட்டம் சிறப்பானதுதான். ஆனால் அதனை செயல்படுத்தும் முறைதான் எதிர்பார்த்த அளவு இல்லை. உதாரணமாக ஆங்கிலத்தில் ஒரு பாடத்தை எடுக்கும் ஆசிரியர் அதில் உள்ள முன்கருத்துகளை விளக்கமாக கூறாமல், நேரடியாக பாடப்புத்தகத்தின் பக்கத்தை கூறி பாடம் நடத்துகிறார். இதனால் மாணவர்கள் அதில் அக்கறை காட்டுவது கிடையாது. மேலும் ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட வீடியோக்களே மீண்டும் மீண்டும் வருகின்றன. இதுமட்டுமல்லாமல், மாணவர்கள் பயன்பெறும் வகையில் அதற்கான கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்படவில்லை. எனவே இதை முறைப்படுத்தி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்தலாம்' என்றுகூறினர்.

இந்த நிலையில் இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கல்வித் தொலைக்காட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகளை விரிவுப்படுத்தும் முயற்சியில் கல்வித்துறை தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது என்றும், இதுதொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வி துறை விரைவில் வெளியிட உள்ளது' என்றும் தெரிவித்தனர்.


Next Story