விநாயகர் சதுர்த்திக்கு குடைகள் விற்பனை செய்த நரிகுறவர் குழந்தைகளிடம் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரி
விநாயகர் சதுர்த்திக்கு குடைகள் விற்பனை செய்த நரிகுறவர் குழந்தைகளிடம் கல்வி குறித்து அதிகாாி விழிப்புணர்வு ஏற்படுத்தினாா்.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா நேற்று திண்டிவனத்துக்கு வருகை தந்திருந்தார். அப்போது, நேரு வீதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி குடைகளை நரிக்குறவர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் விற்பனை செய்து கொண்டு இருந்தனர். இதை பார்த்த முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, அவர்களிடம் சென்று கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் அவரது அறிவுறுத்தலின் படி நரிக்குறவர்களின் குழந்தைகள் திண்டிவனம் புனித அன்னாள் நடுநிலைப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அப்போது, நரிக்குறவர் வாழ் மக்களின் குடியிருப்புகளிலிருந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தருவதாகவும், மாணவர்களின் பெற்றோர்களின் கல்வி சார்ந்த கோரிக்கைகளை முழுமையாக கேட்டறிந்து அவற்றையெல்லாம் செய்து தருவதாகவும் அவர் உறுதியளித்தார். அப்போது, திண்டிவனம் கல்வி மாவட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.