விரைவில் நடைமுறைக்கு வருகிறது: வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகளை இயக்க திட்டம்: ஆதரவு இருக்கிறது; எதிர்ப்பும் கிளம்புகிறது!
வங்கிகள் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயங்குவதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்து, விரைவில் நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதற்கு ஆதரவு இருக்கிறது, எதிர்ப்பும் கிளம்புகிறது.
வங்கி சேவைகள்
பணப் பரிமாற்றங்களுக்கு அடித்தளமாக இருப்பது வங்கிச்சேவைகள் மட்டுமே. முன்பெல்லாம் ஒருவர் வங்கிச்சேவையை பெற வேண்டும் என்றால், நீண்டநேரம் வங்கிகளில் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது வங்கி கணக்குகள் வைத்திருந்தவர்களின் எண்ணிக்கையும் வெகு சொற்பமாக இருந்தது. இது நாளடைவில் மாற்றம் கண்டது.
மத்திய-மாநில அரசுகளின் அனைத்து திட்டங்களையும் பெறுவதற்கு வங்கிக்கணக்கு மிக முக்கியமானதாக ஆனது. இதன் காரணமாகவும், சேமிப்பு பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்ததாலும் இப்போது வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்கேற்றாற்போல், வங்கிச் சேவைகளை எளிதாக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் காகிதப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், டிஜிட்டல் பரிமாற்றங்கள்தான் இப்போதைய வங்கி சேவையில் முதன்மைப்படுத்தப்படுகின்றன.
வாரத்துக்கு 5 நாட்கள் செயல்படும்
என்னதான் டிஜிட்டல் முறையில் சேவைகள் வழங்கப்பட்டாலும், சில தேவைகளுக்கு நேரடியாக வங்கியை அணுகவேண்டிய நிலை இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. அந்தவகையில் அனைத்து தரப்பு மக்களும் அவ்வப்போது வங்கியை நாடவேண்டிய தேவை உள்ளது.
தற்போது வரை வங்கிகளுக்கு மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாட்களிலும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதவிர மாதத்தில் 2 மற்றும் 4-வது வார சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மற்ற அனைத்து நாட்களிலும் மக்கள் வங்கிகளை நேரடியாக அணுகி சேவையை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தற்போது அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் விடுமுறைக்கான ஒப்புதல் பெற முயற்சிகள் நடந்துவருகின்றன.
அதன்படி, இனி வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்கும் நிலை உருவாகியிருக்கிறது. வங்கி ஊழியர்கள் சங்கத்தினர், இந்திய வங்கிகள் சங்கத்துடனான (ஐ.பி.ஏ.) இருதரப்பு ஒப்பந்தத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட உள்ளது. விரைவில் ஒப்புதல் கிடைத்து நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கூறப்படுகிறது. அவ்வாறு சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டாலும், அந்த 2 வார சனிக்கிழமை வேலைநாட்களை மற்ற நாட்களில் கூடுதல் நேரத்தில் பணி செய்து நிவர்த்தி செய்யப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்டகால எதிர்பார்ப்பு
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த நடைமுறைக்கு தற்போது ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக வங்கி அலுவலர்கள், வணிகர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
தேனியை சேர்ந்த வங்கி அதிகாரி உஷாராணி:- வங்கி அலுவலர்கள், ஊழியர்களின் நீண்டகால எதிர்பார்ப்பு இது. சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் விடுமுறை என்று வந்து விட்டால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருத வேண்டாம். தற்போது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அனைத்து இடங்களிலும் வந்து விட்டன. பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சாலையோர வியாபாரிகள் வரை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஏ.டி.எம். மையங்களில் எப்போதும் பணம் இருக்கும். ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்துக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையையும் இந்திய ரிசர்வ் வங்கி அமல்படுத்தி இருக்கிறது. முன்பு பணம் செலுத்தும் எந்திரம் நிரம்பி விட்டால் மேலும் பணம் செலுத்த முடியவில்லை என்று பிரச்சினை இருந்தது.
தற்போது பணம் செலுத்தவும், எடுக்கவும் ஒரே எந்திரம் வந்துள்ளதோடு, வாடிக்கையாளர்கள் செலுத்திய பணத்தையே மற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் வகையில் சுழற்சி முறை அமலில் இருப்பதால் எந்திரம் நிரம்புவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. சனிக்கிழமை விடுமுறை என்று வரும் போது மற்ற நாட்களில் பணி நேரம் சற்று அதிகரிக்கப்படலாம்.
தற்போது வங்கி பணி நேரம் என்பது ஊழியர்கள் பின்பற்றும் நடைமுறையாக தான் இருக்கிறது. வங்கி அதிகாரிகள் பணி முடிந்து செல்வதற்கு இரவு 7 மணியில் இருந்து 8 மணி ஆகிவிடுகிறது. எனவே, பணி நேரத்தை அதிகரித்தாலும் அது பெரிதாக தெரியாது.
எந்திரத்தில் பணம் செலுத்துவதில் சிக்கல்
தனியார் வணிக நிறுவனத்தில் வங்கி தொடர்பான பணிகளை கவனிக்கும் குணசேகரன்:- வெள்ளிக்கிழமை என்பது நல்ல நாளாக பார்க்கப்படுவதால் அந்த நாளில் மக்கள் தங்களின் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் மற்ற நாட்களை விடவும் வெள்ளிக்கிழமையில் விற்பனை அதிக அளவில் நடக்கும். அவ்வாறு வர்த்தகம் மூலம் வரும் பணத்தை வங்கியில் சனிக்கிழமை செலுத்துவோம்.
அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை என்ற நிலை வந்தால் பணத்தை வங்கியில் செலுத்த முடியாமல் அலுவலகத்தில் வைத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அவ்வாறு வைத்து இருப்பது தேவையற்ற அச்சத்தையும், பயத்தையும் கொடுக்கும். மக்கள் கொடுக்கும் பணம் பெரும்பாலும் அழுக்காகவும், பேனாவால் எழுதப்பட்டதாகவும் இருப்பதால் அவற்றை பணம் செலுத்தும் எந்திரத்தில் செலுத்த முடியவில்லை. வங்கியில் நேரடியாக சென்று தான் செலுத்த வேண்டும். எனவே, 5 நாட்கள் மட்டுமே வங்கி செயல்படும் என்று அமல்படுத்தினால் வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
தேனியை சேர்ந்த வங்கி அலுவலர் செந்தில்:- வங்கியில் பணியாற்றுபவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. வங்கிப் பணி முடிந்து வீடு திரும்ப இரவு 8 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. சனிக்கிழமையும் பணியாற்றும் போது ஞாயிறு ஒரு நாள் மட்டுமே விடுமுறை. இதனால், குடும்பத்தினரோடு வெளியிடங்களுக்கு செல்வதோ, பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்வதோ இயலாத ஒன்றாக உள்ளது.
வாரத்தில் ஒரு நாள் கிடைக்கும் விடுமுறையை ஓய்வுக்கு பயன்படுத்தும் மனநிலையில் தான் பெரும்பாலான வங்கி பணியாளர்கள் உள்ளனர். எனவே, மற்ற அரசு துறை அலுவலர்கள் போன்று சனி, ஞாயிறு விடுமுறை என்று வந்தால் நெருக்கடி இன்றி பணியாற்ற ஏதுவாக இருக்கும். வங்கி ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையும் அதுவாகவே உள்ளது. அந்த கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்பட்டால் மகிழ்ச்சி.
பாதுகாப்பான சூழல்
தேனியில் உள்ள தனியார் வணிக நிறுவன மேலாளர் ராஜபிரபு:- வங்கி சேவை என்பது அத்தியாவசியமான ஒன்று. தற்போது மாதம் 2 சனிக்கிழமை வங்கி விடுமுறை என்ற போதே வணிக நிறுவனங்கள் பணப்பரிமாற்றம் செய்வதில் பாதிப்புகளை சந்திக்கின்றனர். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை ஒருபுறம் இருந்தாலும், வணிக நிறுவனங்களில் நேரடி பணப் பரிவர்த்தனையும் அதிக அளவில் நடக்கிறது.
ஏழை, எளிய மக்கள் பெரும்பாலும் பணம் மூலமாகவே பரிவர்த்தனை செய்கின்றனர். அதுபோன்ற மக்களிடம் வணிகம் செய்யும் போது வரும் வருவாயை வங்கியில் அன்றாடம் செலுத்தினால் வணிக நிறுவனங்கள் பாதுகாப்பான சூழலில் இயங்க முடியும். எனவே, வங்கி பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து, சனிக்கிழமையும் வங்கிகள் இயங்கும் சூழலை உருவாக்க வேண்டும்.
ஆண்டிப்பட்டியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் சர்வேஸ்வரன்:- ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து திங்கட்கிழமை வங்கி திறக்கும் போது கூட்டம் அதிக அளவில் இருக்கும். இதனால், நாங்கள் செவ்வாய்க்கிழமை வங்கிக்கு செல்வதை வணிகர்கள் பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். 2 நாட்கள் விடுமுறை என்றால் திங்கட்கிழமை இன்னும் கூட்டம் அதிக அளவில் காணப்படும். மேலும், பெரும்பாலான மக்கள் வெள்ளிக்கிழமை தான் நகை எடுப்பார்கள். இதனால், எங்களை போன்ற நகைக்கடை உரிமையாளர்களுக்கு சனிக்கிழமை வங்கி செயல்பட்டால் தான் பயனுள்ளதாக இருக்கும். சனிக்கிழமையும் விடுமுறை என்றால் பாதிப்பு தான் ஏற்படும்.
அரசு ஊழியர்களுக்கு பாதிப்பு
தேனியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஜெயராஜ்:- மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்றோருக்கு திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பணி இருக்கும். அவர்கள் வங்கி தொடர்பான பணிகளை சனிக்கிழமை தான் மேற்கொள்வார்கள். மாதம் 2 சனிக்கிழமை விடுமுறை என்ற தற்போதைய நடைமுறையே அரசு அலுவலர்களுக்கு பாதிப்பை கொடுக்கிறது. அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை என்றால் விடுமுறை எடுத்துவிட்டு தான் வங்கிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
வங்கி ஊழியர்களுக்கும் ஓய்வு அவசியமானது. எனவே, சுழற்சி முறையில் பணியை ஏற்படுத்தி சனிக்கிழமையும் வங்கி தொடர்ந்து செயல்பட வேண்டும். சனிக்கிழமை பணியாற்றும் அலுவலர்களுக்கு மற்றொரு நாளில் விடுமுறை அளிக்கலாம். ஏனெனில் வங்கிப் பணி என்பது அத்தியாவசியமானது. தொழில்நுட்ப கோளாறால் டிஜிட்டல் சேவை திடீரென முடங்கினால், பரிவர்த்தனையும் முடங்கிவிடும். அப்போதைய சூழலில் வங்கிகள் திறந்து இருப்பதே சிறந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.