சாக்கடை வடிகாலில் இருந்து வெளியேறும் கழிவுநீர்
சாக்கடை வடிகாலில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூரில் இருந்து வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, மண்மங்கலம், சேலம் பைபாஸ் சாலை ஆகிய இடங்களுக்கு செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சர்ச் கார்னர் பகுதியில் இருந்து வெங்கமேடு மேம்பாலம் வழியாக சென்று வருகிறது. வெங்கமேடு மேம்பாலத்தின் இறக்கத்தில் இருந்து ஏராளமான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இருபுறமும் செயல்பட்டு வருகின்றன. வெங்கமேடு பகுதியில் சாக்கடை வடிகால் அமைக்கப்பட்டு, அதன் மீது நடைமேடை அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வெங்கமேடு மேம்பாலத்தின் இறக்கத்தில் உள்ள சாக்கடை வடிகால் பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இந்த கழிவு நீர் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரை சுற்றி தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சாக்கடை வடிகாலில் இருந்து கழிவு நீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.