கீழக்கரை கடல்பகுதியில் கலக்கும் கழிவுநீர்
கீழக்கரை கடல்பகுதியில் கழிவுநீர் கலப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுகிறது.
கீழக்கரை,
கடல்- உலகின் ஆச்சரியங்களில் ஒன்று. எவ்வளவு மழை பெய்தாலும், ஆறுகளில் கரை புரண்டு ஓடும் தண்ணீரை இறுதியில் தனக்குள் வாங்கி கொள்ளும் மகா சக்தி படைத்தது. கரை இல்லாத இறைவன் படைத்த படைப்பு அது. நிலத்தில் லட்சக்கணக்கான உயிர்கள் வாழ்ந்தாலும் கடலிலும் லட்சக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. கடலை நம்பி பிழைப்பவர்களும் ஏராளம். மீனவர்களுக்கு மீன்களை அள்ளிக்கொடுக்கும் கடல் மாதா அது.
கடலை தெய்வமாக மீனவர்கள் வழிபட்டு வருகிறார்கள். சென்னை மெரீனா பீச், தனுஷ்கோடி, கன்னியாகுமரி என கடற்கரையோரத்தில் பொதுமக்கள் கடலின் அழகை பார்த்து தங்கள் பொழுதையும் கழித்து வருகிறார்கள். இன்னும் கடல் அழகை ரசித்து சொல்லி கொண்டே இருக்கலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை பகுதியிலும் கடல் அழகாக தான் இருந்தது முன்பு. தற்போது கீழக்கரை நகராட்சி பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கடலில் கலக்கிறது.
இதனால் கடல் பகுதியில் கழிவுநீரில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. கடற்கரை துர்நாற்றம் வீசுவதால் சுற்றுலா பயணிகள் வருவதற்கும் தயக்கம் காட்டுகிறார்கள். இதை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
மீன்கள் குறைந்து விட்டன
கீழக்கரை வடக்குத்தெருவை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆபித் அலி கூறியதாவது:-
கீழக்கரை, மாயாகுளம், ஏர்வாடி, களிமண்குண்டு போன்ற சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான விசைப்படகுகளும், நாட்டுப் படகு மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் பிரதான தொழிலாக மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர்.
கீழக்கரை கடல் பகுதியில் கிடைக்கும் மீன்களில் அதிக ருசியும் அதிக வரவேற்பும் உள்ளன.கீழக்கரையில் 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இங்குள்ள 21 வார்டுகளிலும் வெளியேறும் கழிவுநீர் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் லிட்டருக்கு மேல் கடலில் கலப்பதால் மீன் வளம் குறைந்து காணப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக கடலில் மீன்வளம் குறைந்ததால் மீன்பாடு குறைவாக உள்ளது. ஒரு சமயத்தில் கீழக்கரை கடல் பகுதியில் நாளொன்றுக்கு 2 டன் முதல் 5 டன்கள் வரை மீன்கள் கிடைத்தது. தற்போது கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு முன்பு போன்று மீன்கள் கிடைப்பதில்லை. மிக குறைவான மீன்களே கிடைக்கிறது.இதனால் வெளியூர்களில் இருந்து வரக்கூடிய மீன்களை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை இருந்து வருகிறது,
இவ்வாறு அவர் கூறினார்.
ஏமாற்றம்
கீழக்கரை சேர்ந்த மீனவர் நாகராஜ் கூறியதாவது:-
சென்ற காலங்களில் கீழக்கரை மீன்களுக்கு வெளியூர்களில் அதிக வரவேற்பு இருந்தன. அதனால் மீனவர்கள் அதிகம் லாபம் அடைந்தனர். தற்போது மீன் பிடிக்க செல்லும்போது தாழை இலைகள் தான் வலையில் சிக்குகிறது.
இதனால் ஏமாற்றத்துடன் கரை திரும்பி வரும் நிலை இருந்து வருகிறது.பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை தாங்கி கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு மீன்கள் கிடைக்காததால் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மீன்பாடு குறைவு காரணமாக படகுகள் கடற்கரையில் பயன்பாடின்றி நிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.