அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ரூ.15 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தினத்தந்தி செய்தி எதிரொலியாக ஆய்வு செய்த நந்தகுமார் எம்.எல்.ஏ. அங்கு ரூ.15 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்புநிலையம் அமைக்க அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மருத்துவ கல்லூரி மருத்துவமனை
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை ெபறும் நிலையில் அங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இது குறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது,
மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சந்தலிபுரம் ஏரியில் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் கழிவறை வசதி இல்லாததால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் அவதிப்படுவது குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை பார்த்த அணைக்கட்டு நந்தகுமார் எம்.எல்.ஏ.நேற்று அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு புறநோயாளிகள் பிரிவை பார்வையிட்டபோது, மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடந்து கொண்டு இருந்தது.
போதுமான இருக்கை வசதி இல்லாததால் பலர் நின்றபடியே சிகிச்சைக்காக காத்திருந்தனர். அவர்களிடம் நந்தகுமார் எம்.எல்.ஏ. குறைகளை கேட்டறிந்தார். மேலும் நின்று கொண்டிருந்தவர்கள் அமருவதற்கு இருக்கை வசதி ஏற்பாடு செய்தார். அதேபோல் உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்கள் ஒரு சில குறைகள் குறித்து நந்தகுமார் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர்.
உங்களுடைய குறைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என நோயாளிகளிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் அறுவை சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மருந்து விநியோக பகுதி, ஆய்வகம், காய்ச்சல் பிரிவு, மகப்பேறு பிரிவு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
பேட்டி
ஆய்வு செய்த பின்னர் நந்தகுமார் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:- அடுக்கம்பாறை அரசு மருத்்துவமனையில் கழிவறை வசதி குறைவாக உள்ளதாக நோயாளிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் செயல்படாமல் உள்ள கழிவறையை திறந்து நவீன வசதிகளுடன் ஒரு வாரத்திற்குள் கழிவறை வசதிகள் செய்து தர பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் அறை கட்ட ரூ.7 லட்சம் மதிப்பில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் கட்டி தரப்படும். அதேபோல்
ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகள் சப்தலிபுரம் ஏரியில் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் ரூ.15 கோடி மதிப்பில் மருத்துவ கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மதிப்பீடு அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கான நிதி ஒதுக்கீடு செய்தவுடன், உடனடியாக பணிகள் தொடங்கி முடிக்கப்படும்.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் தினமும் சுத்திகரிக்கப்படும் 4 லட்சம் லிட்டர் தண்ணீர் கழிவறைகள் மற்றும் செடிகளுக்கு பயன்படுத்தப்படும். மேலும் ஆதரவு இல்லாமல் சிகிச்சைக்கு வந்துள்ளவர்களை தன்னார்வலர்கள் மூலம் கண்காணித்து அவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது கணியம்பாடி ஒன்றிய குழு துணை தலைவர் கஜேந்திரன், பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் பவானிசசிகுமார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அருள்நாதன், மருத்துவ கல்லூரி டீன் பாப்பாத்தி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதி திலகம், துணை முதல்வர் கவுரி, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.