நாமக்கல் மண்டலத்தில் வெயில் காரணமாக முட்டை உற்பத்தி குறைந்தது-தலைவர் செல்வராஜ் தகவல்
நாமக்கல்:
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ராமநவமி முடிவடைவதால் ஐதராபாத், விஜயவாடா, பார்வாலா உள்ளிட்ட மண்டலங்களில் முட்டை விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அனைத்து மண்டலங்களும் இனி விலை குறைப்பதில்லை என்று ஏகமனதாக முடிவு செய்துள்ளன. நாமக்கல் மண்டலத்திலும் 450 காசுகளாக முட்டை விலையை நீட்டிப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே வருகிற நாட்களில் முட்டை விற்பனை மேம்பட வாய்ப்பு உள்ளதால் பண்ணையாளர்கள், அறிவிக்கப்படும் மைனசுக்கு மேல் கொடுக்க வேண்டியது இல்லை. பண்ணைகளில் முட்டை இருப்பு பெரிய அளவில் இல்லாத காரணத்தினாலும், கடும் வெயில் காரணமாக முட்டை உற்பத்தி சற்று குறைந்து உள்ளதாலும் இனிவரும் நாட்களில் அறிவிக்கப்பட்ட மைனசுக்கு மேல் முட்டையை விற்க வேண்டிய அவசியம் இல்லை. பண்ணையாளர்கள் சந்தை நிலவரத்தை அனுசரித்து அதிக மைனசிற்கு விற்காமல், நல்ல விலைக்கு முட்டையை விற்று பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.