ஏகலைவா மாதிரி பள்ளி ஜவ்வாதுமலையிலேயே செயல்பட வேண்டும்


ஏகலைவா மாதிரி பள்ளி ஜவ்வாதுமலையிலேயே செயல்பட வேண்டும்
x

ஏகலைவா மாதிரி பள்ளியை தண்டராம்பட்டுக்கு மாற்றாமல் ஜவ்வாதுமலையிலேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

திருவண்ணாமலை

ஏகலைவா மாதிரி பள்ளியை தண்டராம்பட்டுக்கு மாற்றாமல் ஜவ்வாதுமலையிலேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்று, வேலை வாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை அவர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள்

ஜவ்வாதுமலை ஒன்றியம் பலாமரத்தூர் மற்றும் நம்மியம்பட்டு ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ஜவ்வாதுமலை ஒன்றியம் பலாமரத்தூர் ஊராட்சியில் உள்ள 1-வது கணக்கில் உள்ளவர்களுக்கு 18 மாதமும், நம்மியம்பட்டு ஊராட்சியில் உள்ளவர்களுக்கு 12 மாதமும் ஊதியம் வழங்கவில்லை. பலமுறை தலைவரிடம் நேரில் பேசியும் ஊதியம் வழங்கவில்லை.

இந்த வேலையை நம்பி எங்கள் குடும்பம் வாழ்ந்து வருகின்றது. பிள்ளைகள் படிப்பு மற்றும் உடல்நிலை சரியில்லை என்றால் கூட செலவுக்கு பணம் இல்லாமல் கடன் வாங்கி வாழ்ந்து கொண்டு வருகிறோம். எனவே, பலாமரத்தூர் மற்றும் நம்மியம்பட்டு ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேர்க்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு இதில் கூறப்பட்டு உள்ளது.

ஏகலைவா மாதிரி பள்ளி

ஜமுனாமரத்தூர் தாலுகா பலாமரத்தூர் ஊராட்சி நல்லாப்பட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஜவ்வாதுமலையில் வாழும் பழங்குடி மக்களின் பிள்ளைகள் தரமான கல்வி கற்க வேண்டும் என்கிற நோக்கத்தில் கோவிலூர் ஊராட்சிக்கு உட்பட்ட அத்திப்பட்டு கிராமத்தில் அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளி தொடக்கப்பட்டு நடத்தப்பட்டது. இதில் மலையில் வாழும் பழங்குடி பிள்ளைகள் இந்த பள்ளியில் சேர்ந்து படித்து வருகின்றன. இந்த பள்ளி தற்போது திருப்பத்தூர் மாவட்டம் காவலூரில் உள்ள வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

இதில் திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள மலையில் வாழும் பழங்குடி பிள்ளைகள் கல்வி கற்று வருகின்றனர். தற்போது இடவசதி காரணமாக தண்டராம்பட்டு பகுதிக்கு இந்த பள்ளியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் இங்கு படித்து வரும் 400-க்கும் மேற்பட்ட மலைவாழ் பிள்ளைகள் கல்வி கேள்வி குறியாகுமோ என்ற அச்சம் உள்ளது. ஜவ்வாதுமலை பகுதியான ஜமுனாமரத்தூர் தாலுகாவில் உள்ள மலையில் போதுமான இடங்கள் இருக்கின்றன.

அந்த பகுதியை வருவாய்த்துறை மூலம் தேர்வு செய்து பள்ளி கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்காமல் தண்டராம்பட்டுக்கு மாற்றுவதால் மலைவாழ் பிள்ளைகள் இங்கு இருந்து செல்வது மிகுந்த சிரமம் ஏற்படும். எனவே புதிதாக கட்டும் வரை பலாமரத்தூர் ஊராட்சியில் உள்ள கல்யாணமந்தை கிராமத்தில் உள்ள வனத்துறை பள்ளியில் படிக்க போதுமான கட்டிடம், தண்ணீர் வசதி, உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.

இங்கு அதிகமான மாணவ, மாணவிகள் சேர்ந்து மலைவாழ் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்று 11 ஊராட்சி மன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. எனவே ஏகலைவா மாதிரி பள்ளியை தண்டராம்பட்டுக்கு மாற்றாமல் ஜவ்வாதுமலையிலேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story