எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் கடும் பாதிப்பு
பாலியெஸ்டர் நூல் விலை உயர்வால் எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் கடன் கால அளவை குறைத்து வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
பாலியெஸ்டர் நூல் விலை உயர்வு
பனியன் தொழில் நகரான திருப்பூரில் 200 எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இங்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்கு உள்ளாடை ரகங்களில் இணைப்பதற்கான அனைத்து வகை எலாஸ்டிக் ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. எலாஸ்டிக்கின் முக்கிய மூலப்பொருளான ரப்பர், பாலியெஸ்டர் நூல் ஆகியவற்றை குஜராத், மராட்டிய மாநிலங்களில் இருந்து எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் பெறுகின்றன.
ரப்பர் விலை திடீரென்று உயர்ந்து அதிர்ச்சி கொடுத்து வந்த நிலையில் தற்போது பாலியெஸ்டர் நூல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை கிலோவுக்கு ரூ.20 பாலியெஸ்டர் நூல் விலை உயர்ந்துள்ளது. தற்போது மீண்டும் கடந்த ஒரு மாதத்தில் கிலோவுக்கு ரூ.20 உயர்ந்துவிட்டது. 1 கிலோ பாலியெஸ்டர் நூல் விலை ரூ.132 வரை அதிகரித்து விட்டது.
கடன் கால அளவை குறைக்க வேண்டும்
இதுகுறித்து திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கோவிந்தசாமி கூறியதாவது:-
பருத்தி நூல் விலை உயர்வால் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் புதிய ஆர்டரை தவிர்த்து வருகிறார்கள். பின்னலாடை உற்பத்தியை சார்ந்தே இருப்பதால் தற்போது எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் 40 சதவீதம் மட்டுமே செயல்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலர் விலை உயர்வால் பாலியெஸ்டர் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்னும் உயரும் என்று தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் கூட கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து விட்டது. ஆர்டர் எங்களுக்கு கிடைத்தாலும் பாலியெஸ்டர் நூல் போதுமான அளவு உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. வடமாநிலங்களில் பனியன் நிறுவனங்களுக்கு பாலியெஸ்டர் நூலுக்கு அதிக வரவேற்பு உள்ளதால் பணம் முழுவதுமாக செலுத்தினால் மட்டுமே நமக்கு நூல் அனுப்பி வைக்கிறார்கள். இங்குள்ள பனியன் உற்பத்தி நிறுவனங்கள் செய்த ஆர்டர்களுக்கான பணத்தை கொடுப்பதில் தாமதம் செய்கிறார்கள். இதன்காரணமாக எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பின்னலாடை உற்பத்தியாளர்கள் கடன் கால அளவை குறைத்து, விரைவில் பணத்தை வழங்கி ஒத்துழைக்க வேண்டும். பணம் கொடுத்தால் மட்டுமே மூலப்பொருட்கள் கிடைக்கும் நிலை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.