ஓய்வு பெற்ற நாளில் நெகிழ்ச்சி சம்பவம்: போலீஸ் வாகன இன்ஸ்பெக்டர் இருக்கையில் சப்-இன்ஸ்பெக்டரை அமர வைத்த போலீசார்


ஓய்வு பெற்ற நாளில் நெகிழ்ச்சி சம்பவம்:  போலீஸ் வாகன இன்ஸ்பெக்டர் இருக்கையில் சப்-இன்ஸ்பெக்டரை அமர வைத்த போலீசார்
x
தினத்தந்தி 2 July 2023 12:45 AM IST (Updated: 2 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

பணி ஓய்வு பெற்ற நாளில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை போலீஸ் வாகனத்தில் இன்ஸ்பெக்டர் இருக்கையில் அமர வைத்து வழியனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

பணி ஓய்வு பெற்ற நாளில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை போலீஸ் வாகனத்தில் இன்ஸ்பெக்டர் இருக்கையில் அமர வைத்து வழியனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நெகிழ்ச்சி சம்பவம்

தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளில் பணியாற்றி 60 வயது பூர்த்தி அடைந்த அரசு ஊழியர்கள் பலர் நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றனர். அவ்வாறு ஓய்வுபெற்றவர்களை அவர்களுடன் பணி புரிந்த சக ஊழியர்கள் உற்சாகமாக வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஓய்வு பெற்றவரை சக ஊழியர்கள் கட்டி தழுவி வாழ்த்துகள் தெரிவித்து பூரண நலத்துடன் வாழ வேண்டும் என்று கூறி வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

அதே சமயம் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குபிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை, இன்ஸ்பெக்டர் அருண் தனது வாகனத்தில் வழியனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்

சாமிதோப்பு அருகே உள்ள கோட்டைவிளையை சேர்ந்தவர் டேவிட் சந்திரபோஸ் (வயது60). இவர் நாகர்கோவிலில் போக்குவரத்து ஒழுங்குபிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். டேவிட் சந்திரபோஸ் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து பிரிவு உபசார விழா நாகர்கோவில் கோட்டாரில் உள்ள போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் நிலையத்தில் நடந்தது. விழாவில் போலீசார் கலந்துகொண்டு பணி ஓய்வுபெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை வாழ்த்தினர்.

பின்னர் அவரை சக போலீசார் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு விடுவதற்கு தயாரானார்கள். அப்போது இன்ஸ்பெக்டர் அருண், தனக்காக ஒதுக்கப்பட்டுள்ள போலீஸ் காரில் அழைத்துச் சென்று வீட்டில் விட்டு விட்டு வருமாறு கேட்டுக் கொண்டார். பொதுவாக போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் கார் வழங்குவது இல்லை. ஏதாவது வழக்கு விசாரணைக்காக வெளியூர் சென்றாலும் கூட காரில் பின் இருக்கையில் அமர்ந்து தான் செல்வார்கள். முன் இருக்கையில் இன்ஸ்பெக்டர், துணை சூப்பிரண்டு ஆகிய அதிகாரிகள் மட்டும் தான் அமர்ந்து செல்வார்கள்.

பாராட்டு

ஆனால் பணி ஓய்வை கருத்தில் கொண்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் சந்திரபோசை போலீஸ் வாகனத்தில் இன்ஸ்பெக்டர் இருக்கையில் அமர வைத்து அழைத்துச் சென்று கவுரவப்படுத்தும்படி இன்ஸ்பெக்டர் கூறினார். இதற்கு முதலில் டேவிட் சந்திரபோஸ் மறுப்பு தெரிவித்தார். ஆனால் இன்ஸ்பெக்டரின் உத்தரவுப்படி அவரை சக போலீசார் காரில் அழைத்துச் சென்று வீட்டில் விட்டனர்.

இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருணுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.

---


Next Story