வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் வீட்டுக்குள் வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
பாவூர்சத்திரம்:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் வாணிபர் காந்தி சிலை தெருவில் வசித்து வந்தவர் தனுஷ்கோடி என்ற தங்கையா (வயது 81). இவருடைய மனைவி கிருஷ்ணம்மாள் (74). வயதான தம்பதியான தங்கையாவும், கிருஷ்ணம்மாளும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர். தங்கையா தனது வீட்டு அருகிலேயே பெட்டிக்கடை நடத்தி வந்தார்.
இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகி அந்த பகுதியிலேயே தனித்தனியாக வசித்து வருகின்றனர். தங்கையாவும், மனைவி கிருஷ்ணம்மாளும் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்காக இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனாலும் நோய் குணமாகவில்லை என்றும், இதனால் சோகத்துடன் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நேற்று காலையில் தங்கையாவின் மகன் ராமச்சந்திரன் தனது பெற்றோரை செல்போன் மூலம் அழைத்தார். ஆனால் செல்போன் அழைப்பை அவர்கள் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் பெற்றோர் வசித்த வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கு அவர் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது. தங்கையாவும், கிருஷ்ணம்மாளும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை அறிந்த அவர் திடுக்கிட்டார். பெற்றோர் உடலை பார்த்து கதறி அழுதார்.
இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கணவன், மனைவி உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் கணவனும், மனைவியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.