மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மூதாட்டி தர்ணா
வங்கியில் கடன் வாங்கித் தருவதாக ஏமாற்றி தனது பெயருக்கு பத்திரத்தை மாற்றிய மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மூதாட்டி வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.
மூதாட்டி தர்ணா
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, சமூகபாதுகாப்பு திட்ட உதவிகலெக்டர் தனஞ்செயன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.
குறைதீர்வு கூட்டத்தில், ஊசூரை அடுத்த புலிமேடு கிராமத்தை சேர்ந்த சின்னக்கண்ணு மனைவி பூங்காவனம்மாள் (வயது 80) மற்றும் அவருடைய கடைசி மகன் சம்பத் ஆகியோர் மனு அளிக்க வந்தனர். அவர்கள் திடீரென குறைதீர்வு கூட்டரங்கின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மூதாட்டி சிறிய அளவிலான பெட்ரோல் பாட்டிலை மறைத்து கொண்டு வந்திருந்தார். அதைக்கண்ட போலீசார் உடனடியாக அந்த பாட்டிலை பறிமுதல் செய்தனர்.
இதுபற்றி தகவலறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உடனடியாக மூதாட்டியிடம் விசாரித்தார்.
ஏமாற்றி பத்திரப்பதிவு
அப்போது அவர், எனக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். எனக்கு சொந்தமான நிலத்தை மூத்த மகன் ஏமாற்றி அவனுடைய பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொண்டான். இதனால் மற்ற பிள்ளைகளுக்கு இடத்தை பிரித்து கொடுக்க முடியவில்லை. நிலத்தை திரும்ப எனது பெயருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தற்போது நடவடிக்கை எடுக்கக்கோரி பெட்ரோல் பாட்டிலுடன் குறைதீர்வு கூட்டத்துக்கு வந்தேன் என்று கூறினார்.
அவரிடம் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், நீங்கள் பத்திரத்தில் கையெழுத்து போடாமலே உங்கள் மகன் தனது பெயருக்கு பத்திரத்தை மாற்றி கொண்டாரா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மூதாட்டி, வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி பத்திரத்தில் கையெழுத்து பெற்று அவனுடைய பெயருக்கு மாற்றி உள்ளான் என்றார்.
பத்திரத்தை ரத்து செய்ய உத்தரவு
இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மூதாட்டியின் மனுவின் மீது நடவடிக்கை எடுக்கவும், ஏமாற்றி பதிவு செய்த பத்திரத்தை ரத்து செய்யவும் போலீசார் மற்றும் பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் மனு கொடுக்க வரும்போது தற்கொலை முயற்சியில் ஈடுபடும் வகையில் பெட்ரோல், மண்எண்ணெய் உள்ளிட்டவற்றை எடுத்து வரக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். இதனால் குறைதீர்வு நாள் கூட்டத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.