நீர்த்தேக்க தொட்டி ஏணியில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை


நீர்த்தேக்க தொட்டி ஏணியில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
x

நீர்த்தேக்க தொட்டி ஏணியில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட்:

தூக்கில் பிணமாக தொங்கினார்

திருச்சி மாவட்டம், குணசீலம் அருகே காவிரி ஆறு படித்துறையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இரும்பு ஏணியில் ஒருவர் தூக்கில் தொங்குவதாக வாத்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கியவரின் உடலை கீழே இறக்கி, அவரது சட்டை பையில் இருந்த ஆதார் கார்டு நகலை பார்வையிட்டு, அதனை கொண்டு விசாரணை நடத்தினர்.

இதில் இறந்தவர் சென்னை தாம்பரம் அருகே உள்ள சானிட்டோரியம் பகுதியை சேர்ந்த பத்மநாபன்(வயது 60) என்பது தெரியவந்தது. கடந்த 14-ந் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு வந்த அவர், புரட்டாசி சனிக்கிழமையான நேற்று முன்தினம் திருச்சி குணசீலம் கோவிலுக்கு சென்று பெருமாளை இரண்டு முறை தரிசனம் செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

உருக்கமான கடிதம்

மேலும் அவர் எழுதியதாக ஒரு கடிதம் போலீசாரிடம் கிடைத்தது. அதில், குணசீலத்திலேயே தங்கி இரவில் பெருமாளிடம் சென்றுவிடுவேன். என் உடலை திருச்சியில் அடக்கம் செய்துவிடுங்கள். பாப்பாவிற்கு அன்பு முத்தங்கள். இந்த நிலைமைக்கு காரணமானவர்களை பெருமாள் தண்டிப்பார் என்று பத்மநாபன் உருக்கமுடன் எழுதி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து பத்மநாபனின் உடலை பிரேத பரிசோதனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தினர். இதில், ஓட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி கடந்த 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வந்தார்.

ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம்

இந்நிலையில் பத்மநாபனிடம், அப்பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் முகவர்கள் சிலர் ரியல் எஸ்டேட் தொழிலில் பணத்தை முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய பத்மநாபன் லட்சக்கணக்கில் பணத்தை கடன் வாங்கி ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து, அதில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுக்கவே, மன உளைச்சலில் இருந்தார். இதையடுத்து அவர் நேற்று முன்தினம் காலை திருச்சி மாவட்டம், குணசீலத்தில் உள்ள வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளார்.

தற்கொலை

பின்னர் அங்கேயே தங்கிய பத்மநாபன் நள்ளிரவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இரும்பு ஏணியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story