தறிகெட்டு ஓடிய ஆம்புலன்ஸ் மோதி முதியவர் பலி


தறிகெட்டு ஓடிய ஆம்புலன்ஸ் மோதி முதியவர் பலி
x
தினத்தந்தி 12 Aug 2022 2:50 AM IST (Updated: 12 Aug 2022 2:51 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே தறிகெட்டு ஓடிய ஆம்புலன்ஸ் மோதி முதியவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருநெல்வேலி

பேட்டை:
நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்த நோயாளி ஒருவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அந்த ஆம்புலன்ஸ் நேற்று காலையில் முக்கூடலுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தது. அந்த ஆம்புலன்சில் டிரைவராக நெல்லையை அடுத்த மேல திருவேங்கடநாதபுரம் அண்ணாநகரை சேர்ந்த சமுத்திரம் மகன் மோகன்ராஜூம் (38), மருத்துவ உதவியாளராக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மெயின் ரோட்டைச் சேர்ந்த உத்தமன் மகன் அன்னராஜூம் (29) இருந்தனர்.

நெல்லை அருகே சுத்தமல்லியை அடுத்த கொண்டாநகரம் விலக்கில் சென்றபோது ஆம்புலன்ஸ் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. அப்போது சாலையோரம் நடைப்பயிற்சி சென்ற சுத்தமல்லி கோமதிநகரை சேர்ந்த சுப்பிரமணியன் (62) மீது ஆம்புலன்ஸ் பயங்கரமாக மோதி விட்டு, சாலையோர மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் ஆம்புலன்ஸ் டிரைவர் மோகன்ராஜ், மருத்துவ உதவியாளர் அன்னராஜ் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், சுத்தமல்லி போலீசார் விரைந்து சென்று, படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்த சுப்பிரமணியனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுப்பிரமணியன், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story