கொடி கம்பத்தில் கார் மோதி முதியவர் பலி; 3 பேர் படுகாயம்

ஆண்டிமடம் அருகே கொடி கம்பத்தில் கார் மோதிய விபத்தில் முதியவர் பலியானார். படுகாயம் அடைந்த 3 ேபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுவாமிமலை கோவில்
சென்னை ஆவடியை சேர்ந்தவர் மனோகர் (வயது 65). இவர் தனது மனைவி பானுமதி (57) மற்றும் உறவினரான கும்பகோணம் மகாமககுளத்தை சேர்ந்த புவனேஸ்வரி (73) ஆகியோருடன் சென்னையில் இருந்து கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக காரில் சென்றனர். காரை சென்னை சிட்லபாக்கம் லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த சபரிவாசன் ஓட்டி சென்றார்.
பின்னர் அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று மாலை 6 மணியளவில் சென்னை செல்வதற்காக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்-விருத்தாச்சலம் சாலையில் ராங்கியம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
பிரேத பரிசோதனை
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று பஸ் நிறுத்தம் அருகே இருந்த கொடி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த மனோகர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த டிரைவர் சபரிவாசன், பானுமதி, புவனேஸ்வரி ஆகியோரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான மனோகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.