ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க எதிர்ப்பு: செல்போன் கோபுரத்தில் ஏறி முதியவர் போராட்டம்


ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க எதிர்ப்பு: செல்போன் கோபுரத்தில் ஏறி முதியவர் போராட்டம்
x

செல்போன் கோபுரத்தில் ஏறி முதியவர் போராட்டம் நடத்தியதால் சேலம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

கொண்டலாம்பட்டி:

புறம்போக்கு நிலம்

சேலம் கொண்டலாம்பட்டி அருகே பெரியபுத்தூர் ஊராட்சி பகுதி சக்தி கோவில் பகுதியை சேர்ந்தவர் சகாதேவன் (வயது 61). இவர் வசித்து வரும் இடத்தை ஒட்டி அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சகாதேவன் மரங்கள் வளர்த்து வந்துள்ளார். இந்த நிலத்தை மீட்கக்கோரி பெரியபுத்தூர் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த இடத்தில் தண்ணீர் தொட்டி கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனை அறிந்த சகாதேவன், செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தினார். அப்போது அதிகாரிக்ள அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

மீண்டும் போராட்டம்

இந்தநிலையில் அந்த நிலத்தில் ஊராட்சி சார்பில் தண்ணீர் தொட்டி அமைப்பதற்கான பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. இதனை அறிந்த சகாதேவன் நேற்று காலை 11.45 மணி அளவில் 150 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்.

தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சகாதேவனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர், செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வர மறுத்து விட்டார்.

7 மணி நேரத்துக்கு பிறகு...

சம்பவ இடத்துக்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர். சகாதேவனிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மாலை 6.45 மணி அளவில் சகாேதவன், செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினார். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது அவரது உடல்நிலை மோசமாக இருந்ததாக தெரிகிறது.

உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சுமார் 7 மணி நேரத்துக்கு பிறகு சகாதேவன் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த சம்பவம் கொண்டலாம்பட்டி பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story