11 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல்: 80.16 சதவீத வாக்குகள் பதிவு


11 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல்: 80.16 சதவீத வாக்குகள் பதிவு
x

நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 11 பதவிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில் 80.16 சதவீதம் பேர் ஓட்டு போட்டனர்.

நாமக்கல்

நாமக்கல்:

உள்ளாட்சி பதவி தேர்தல்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, நாமக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகளில் 30.4.2022 வரை காலியாக உள்ள 16 பதவி இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் இளநகர், மாவுரெட்டிப்பட்டி, சிறுநல்லிக்கோயில், செருக்கலை மற்றும் சிறுமொளசி ஆகிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒரு வேட்புமனு மட்டுமே வரப்பெற்றது. எனவே 5 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

பிள்ளாநல்லூர் பேரூராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவி, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக் குழு 4-வது வார்டு உறுப்பினர், நாமகிரிபேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆயில்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, இளநகர் ஊராட்சி 2-வது வார்டு மற்றும் மாவுரெட்டிபட்டி ஊராட்சி 2-வது வார்டு, வடவத்தூர் ஊராட்சி 2-வது வார்டு, சிறுநல்லிக்கோவில் ஊராட்சி 3-வது வார்டு, ராசிபாளையம் ஊராட்சி 9-வது வார்டு, மத்துருட்டு ஊராட்சி 5-வது வார்டு, ஓடப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சி 3-வது வார்டு மற்றும் தட்டாங்குட்டை ஊராட்சி 11-வது வார்டு, செருக்கலை ஊராட்சி 9-வது வார்டு, கதிராநல்லூர் ஊராட்சி 1-வது வார்டு, மோளப்பாளையம் ஊராட்சி 8-வது வார்டு, கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சி 8-வது வார்டு, சிறுமொளசி ஊராட்சி 4-வது வார்டு உள்ளிட்ட 11 காலி பதவியிடங்களுக்கு 34 பேர் போட்டியிட்டனர்.

வாக்குப்பதிவு

இதற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதையொட்டி சம்பந்தப்பட்ட பகுதிகளில் 26 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இவற்றில் காலை முதல் மாலை வரை பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக் குழு 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் உள்ள 5,671 வாக்காளர்களில், 4,933 பேர் ஓட்டு போட்டனர். இதேபோல் ஆயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மொத்தம் உள்ள 3,296 வாக்காளர்களில் 2,492 பேரும், பிள்ளாநல்லூர் பேரூராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் உள்ள 653 வாக்காளர்களில் 566 பேரும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

80.16 சதவீத வாக்குப்பதிவு

எருமப்பட்டி அருகே உள்ள வடவத்தூர் ஊராட்சி மன்ற 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் போட்டியிட்டனர். இந்த பதவிக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. வார்டில் உள்ள மொத்த வாக்காளர்கள் 326 பேரில் 258 பேர் வாக்களித்தனர். பின்னர் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் எருமப்பட்டி ஒன்றிய அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மொத்தம் காலியாக உள்ள 11 இடங்களுக்கு 14 ஆயிரத்து 47 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் ஆவார்கள். இவர்களில் 5,360 ஆண்கள், 5,899 பெண்கள் மற்றும் ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 11 ஆயிரத்து 260 பேர் வாக்களித்தனர். இது 80.16 சதவீத வாக்குப்பதிவு ஆகும். இந்த வாக்குகள் வருகிற 12-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story