புதிய வாக்குச்சாவடி அமைக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல்


புதிய வாக்குச்சாவடி அமைக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல்
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

போடி அருகே முதுவாக்குடி மலைகிராமத்தில் புதிய வாக்குச்சாவடி அமைக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.

தேனி

வாக்குச்சாவடி மறுசீரமைப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 1-1-2023-ம் நாளினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் நடக்கவுள்ளன. இதன் முன்சுருக்கத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வாக்குச்சாவடிகளை மறுசீரமைக்கும் பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடி அமைத்தல், பள்ளியின் பெயர் மாற்றம், கட்டிடம் பழுது ஏற்பட்டதன் காரணமாக மாற்று கட்டிடம் ஏற்படுத்துதல் சம்பந்தமாக தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் இருந்து வரப்பெற்ற வரைவு வாக்குச்சாவடி பட்டியல், தலைமை தேர்தல் அலுவலர் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காமயகவுண்டன்பட்டி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி எண்கள் 231, 232, 233, 235, 236, 237 ஆகியவை இயங்கின. அந்த பள்ளி தற்போது செயல்படாததால் வாக்குச்சாவடி எண் 231, 232, 233 ஆகியவை அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி கட்டிடத்துக்கும், வாக்குச்சாவடி எண் 235, 236, 237 ஆகியவை அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் மாற்றப்பட்டுள்ளது.

முதுவாக்குடியில் வாக்குச்சாவடி

கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகராட்சி மெயின் தொடக்கப்பள்ளியில் இயங்கி வந்த வாக்குச்சாவடி எண் 271, ஆங்கூர்ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது. கம்பம் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண்கள் 266, 268, 269, 270, 284, 294, 295 ஆகியவற்றின் பெயர்களில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்று இருப்பதை ஆங்கூர்ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என பெயர் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முதுவாக்குடி மலைக்கிராம மக்கள் வாக்களிக்க 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சென்டிரல் ஸ்டேசன் செல்ல வேண்டியது இருப்பதால், முதுவாக்குடி கிராமத்திலேயே வாக்குச்சாவடி அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முதுவாக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் புதிய வாக்குச்சாவடி மையம் அமைக்க இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து ஒப்புதல் வரப்பட்டுள்ளது.

எனவே, வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டதன் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில் வெளியிடப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story