தேர்தல் தொகுதி பங்கீடு: தி.மு.க. - ம.தி.மு.க. இடையே நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை
நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. - ம.தி.மு.க. இடையே நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, தேர்தல் பிரசாரம் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிவிட்டன.
அந்த வகையில் தி.மு.க., தன்னுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளையும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியையும் ஒதுக்கி உறுதியாக்கிவிட்டது. மற்ற கூட்டணி கட்சி தலைவர்களும், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையிலான குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க.-ம.தி.மு.க. இடையே அண்ணா அறிவாலயத்தில் நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு மேல் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ம.தி.மு.க.வினர் ஒரு மக்களவையும், ஒரு மாநிலங்களவையும் கேட்டு வலியுறுத்துவதாகவும், ஆனால் தி.மு.க.வினர் மக்களவை தொகுதி கொடுக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக பேச்சுவார்த்தை நீடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கூட்டணி சின்னம் இல்லாமல் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதில் ம.தி.மு.க.வினர் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.