வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் தேர்த்திருவிழா


வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் தேர்த்திருவிழா
x

வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ தேர்த்திருவிழா நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

வேலூர்

தேர்த்திருவிழா

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் ஆடி வெள்ளி திருவிழா நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கடந்த 5-ந் தேதி ஆடி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் அம்மன் தினமும் காலையில் கேடயத்திலும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

விழாவின் 7-வது நாளான நேற்று ஆடி தேர்த்திருவிழா நடந்தது. முன்னதாக காலையில் மூலவர் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காப்பு கட்டிய பக்தர்கள் அம்மனை தோளில் சுமந்து வந்து தயார் நிலையில் இருந்த 25 அடி உயரம் கொண்ட மரத்தேரில் வைத்தனர்.

வாண வேடிக்கை

அதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு ஏராளமான பெண்களும், ஆண்களும் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கோவில் தெரு, பஜனை கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக தேரோட்டம் நடந்தது.

இரவு 7 மணிக்கு வாண வேடிக்கையும், இரவு 10 மணிக்கு தெருக்கூத்து கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் போலீசார் அவர்களை கட்டுப்படுத்தி வரிசையில் சென்று தரிசனம் செய்யவைத்தனர்.

தேரோட்டத்தில் வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு.பாபு, பள்ளிகொண்டா பேரூராட்சி மன்ற தலைவர் சுப பிரியா குமரன், செயல் அலுவலர் உமாராணி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ராதேவி, இணைஆணையர், ரமணி, கோவில் செயல் அலுவலர் நரசிம்ம மூர்த்தி, கணக்காளர் பாபு, கோவில் பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story