ஈரோட்டில் தேர்தல் திருவிழா:வீதிகள் தோறும் கட்சி சின்னங்களுடன் தோரணங்கள்கரை வேட்டிகளுடன் நடமாடும் தொண்டர்கள்


ஈரோட்டில் தேர்தல் திருவிழா:வீதிகள் தோறும் கட்சி சின்னங்களுடன் தோரணங்கள்கரை வேட்டிகளுடன் நடமாடும் தொண்டர்கள்
x

கரை வேட்டிகளுடன் நடமாடும் தொண்டர்கள்

ஈரோடு

ஈரோடு தேர்தல் திருவிழாவையொட்டி கட்சி சின்னங்களுடன் கூடிய கொடிகள் தோரணங்கள், கரை வேட்டி கட்சி நடமாடும் தொண்டர்களால் வீதிகள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டு உள்ளது.

77 பேர் போட்டி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் 27-ந் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் முடிந்து இறுதியாக 77 பேர் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள். தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. அணியில் அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வான கே.எஸ்.தென்னரசு களம் இறங்கி இருக்கிறார். தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் குறிப்பிடத்தக்க வேட்பாளர்களாக களம் காண்கிறார்கள். தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் கே.பத்மராஜனும் இந்த தேர்தல் களத்தில் உள்ளார்.

இப்படி ஒரு இடைத்தேர்தலில் 77பேர் போட்டியிடும் பரபரப்பான தேர்தலாக இது உள்ளது. இதற்கிடையே அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டு வாக்கு கேட்டு வீடு வீடாக படை எடுத்து வருகிறார்கள்.

தி.மு.க. கூட்டணி

பெரிய அரசியல் கட்சிகள் 2 அணிகளாக பிரிந்து இந்த போட்டியில் உள்ளன. தி.மு.க. தலைமையிலான கூட்டணி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியாக காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, உள்ளிட்ட கட்சிகளுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணைந்து ஒரே முகமாக இந்த தேர்தலை சந்திக்கின்றன.

தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரடியாக இந்த தேர்தலை தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், அவரது கட்சியின் மூத்த தலைவர்களாக இருக்கும் துரை முருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு மற்றும் அனைத்து அமைச்சர்களையும் இந்த தேர்தல் களத்தில் பணியாற்ற உத்தரவிட்டு இருக்கிறார். அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், ஆர்.ராமச்சந்திரன், ஆர்.சக்கரபாணி, வி.செந்தில்பாலாஜி, ஆர்.காந்தி, பி.கே.சேகர்பாபு, எஸ்.எம்.நாசர், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ வி.மெய்யநாதன், சி.வி.கணேசன், கயல்விழி செல்வராஜ் என்று பெரும்பாலான அமைச்சர்கள் ஈரோட்டில் தங்கி இருந்து அன்றாடம் மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இலக்கு

தமிழக முதல்-அமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் ஈரோட்டில் வீதி வீதியாக மக்களை சந்தித்து கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரிக்க வருகிறார். மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பிரசாரத்துக்கு வருகிறார்கள்.

தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தையும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி தலைமையில் மாவட்ட தி.மு.க.வினர் இணைந்து செய்து வருகிறார்கள்.

இதுபோல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள், தேர்தல் பணிக்குழு தலைவர் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் என பல்வேறு தலைவர்கள் தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் ராஜேஸ்குமார் (கிள்ளியூர்), ரூபி மனோகரன் (நாங்குநேரி) ஆகியோரும் ஈரோட்டில் தங்கி இருந்து தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. 2 நாட்கள் வீதி வீதியாக சென்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்குகள் சேகரிக்க உள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ.வான ஆர்.எம்.பழனிசாமி, மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி உள்ளிட்ட கட்சியினரும் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கமல்ஹாசன்

வருகிற 19-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாலை 5 மணிக்கு கருங்கல்பாளையம் காந்தி சிலை பகுதியில் பிரசாரத்தை தொடங்குகிறார். அங்கிருந்து சூரம்பட்டி நால்ரோடு, சம்பத்நகர், வீரப்பன்சத்திரம், பி.பி.அக்ரகாரம் பகுதிகளில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்ய உள்ளார்.

அ.தி.மு.க.

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அ.தி.மு.க. அணியில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டுகள் கேட்டு வருகிறார். முன்னாள் அமைச்சரும் கட்சியின் தலைமை நிலைய செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் அ.தி.மு.க.வின் தேர்தல் பொறுப்பை கையில் எடுத்து செயல்பட்டு வருகிறார்.

மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, செல்லூர் ராஜூ, கே.சி.கருப்பணன் என்று அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு மாவட்டங்களின் நிர்வாகிகளும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணியை செய்து வருகிறார்கள்.

த.மா.கா.-பா.ஜனதா

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஏற்கனவே ஒரு கட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்து உள்ளார். மீண்டும் 21-ந் தேதி தேர்தல் பணிக்கு வருகிறார். துணைத்தலைவர் ஆறுமுகம், பொதுச்செயலாளர் விடியல் எஸ்.சேகர், இளைஞர் அணி மாநில தலைவர் எம்.யுவராஜா ஆகியோர் முழு நேரமும் அ.தி.மு.க. அமைச்சர்களுடன் இணைந்து களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கூட்டணி கட்சியான பா.ஜனதா கட்சியின் விளையாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் அக்னி எம்.ராஜேஸ் தலைமையில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். டாக்டர் சரஸ்வதி எம்.எல்.ஏ. உள்பட பா.ஜனதாவினர் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

தே.மு.தி.க.

தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆனந்துக்கு ஆதரவு கேட்டு மாநில துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், கட்சி தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கட்சியின் அவைத்தலைவர் இளங்கோவன், பார்த்தசாரதி, மோகன்ராஜ் ஆகியோரும் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

நாம் தமிழர்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் பிரசாரம் செய்தும் பொதுக்கூட்டங்களில் பேசியும் கரும்பு விவசாயி சின்னத்துக்கு ஓட்டுகள் கேட்டு வருகிறார்.

இவர்கள் தவிர ஆங்காங்கே சுயேச்சைகளும் வீடு வீடாக சென்று வருகிறார்கள்.

கொண்டாட்டம்

வாக்காளர்கள், தொழிலாளர்களை கவர தற்போதைய மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பல்வேறு முயற்சிகளை செய்து வருவது தேர்தல் களத்தை சுவாரசியமாக்கி உள்ளது. தங்கள் கட்சி தலைவர்கள் வரும் இடங்களில் எல்லாம் அந்த பகுதியினர் கட்சிக்கொடி, சின்னங்கள் பொறித்த தோரணங்களால் அலங்காரம் செய்து வருகிறார்கள். தி.மு.க. அணி, அ.தி.மு.க. அணி வேறுபாடு இன்றி அனைத்து பகுதிகளிலும் தோரணங்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. இதனால் அந்த பகுதிகளில் தேர்தல் திருவிழா களை கட்டி இருக்கிறது.

அதுபோல் கட்சிக்கொடி கரைபோட்ட வேட்டி அணிந்த தொண்டர்களை எந்த வீதியில் திரும்பினாலும் பார்க்க முடிகிறது. உள்ளூர் -வெளியூர் தொண்டர்கள், நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு தொகுதியின் வீதிகளில் 2 கை எடுத்து கும்பிட்டுக்கொண்டே நடமாடுவதை பொதுமக்களும் வேடிக்கை பார்க்கிறார்கள். ஆனால் இதற்கு அவர்கள் பதில் கூறும் நாளாக 27-ந் தேதி இருக்கும். முடிவு தெரியும் நாளாக மார்ச் 2-ந் தேதி உள்ளது. இந்த பணிகள் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அப்போது பார்க்கலாம்.


Next Story