திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியல்
வேலூர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்.
வேலூர் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டிற்கான மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் உறுப்பினர்களை கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
வேலூர் மாவட்ட வாக்காளர் பதிவு அலுவலரும், கலெக்டருமான குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதனை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான ராமமூர்த்தி பெற்று கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, வேலூர் மாநகராட்சி செயற்பொறியாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் மாவட்ட ஊராட்சி 14 கவுன்சிலர்கள், வேலூர் மாநகராட்சி 60 கவுன்சிலர்கள், நகராட்சிகளை சேர்ந்த 57 கவுன்சிலர்கள், பேரூராட்சிகளை சேர்ந்த 63 கவுன்சிலர்கள் என்று மொத்தம் 194 பேர் உள்ளனர். வேலூர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலின் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்படும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.