மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு நடத்தப்பட்ட தேர்தல் செல்லும் -ஐகோர்ட்டு உத்தரவு


மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு நடத்தப்பட்ட தேர்தல் செல்லும் -ஐகோர்ட்டு உத்தரவு
x

மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தல் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு 4 நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடத்துவதை எதிர்த்து அந்த கிளப் உறுப்பினர் கலியபெருமாள், சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சிவில் கோர்ட்டு தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மீண்டும் ஐகோர்ட்டை நாடும்படி உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தேர்தலை நடத்தலாம் ஆனால், முடிவுகளை வெளியிடக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

முக்கிய பிரச்சினை

அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி ஆன்லைன் வாயிலாக தேர்தல் நடந்தது. இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கிளப் சார்பில் மூத்த வக்கீல் அரவிந்த்பாண்டியன், கலியபெருமாள் தரப்பில் வக்கீல் ஜி.முருகேந்திரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கில் முக்கிய பிரச்சினையே தேர்தலை எப்படி நடத்த வேண்டும்? கம்பெனி சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டுள்ள ரேஸ் கிளப்பில் 1,000 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ளனர். அப்படி இருக்கும்போது, நிர்வாகி தேர்தலை நேரடியாக நடத்துவதா? அல்லது ஆன்லைன் மூலம் நடத்துவதா? வாக்காளர் பட்டியல் முழுமையாக பெறப்பட்டுள்ளதா? என்பதே ஆகும்.

தேர்தல் செல்லும்

கிளப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பட்டியலை பார்க்கும்போது, வாக்காளர் பட்டியல் முழுமை பெற்றுள்ளது. சந்தா செலுத்தாதவர்கள், குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும், கம்பெனி சட்ட விதிகளின்படி மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், எந்த ஒரு கம்பெனியும் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடத்தி தேர்தலை நடத்தலாம் என்று கூறியுள்ளது.

எனவே, கடந்த ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி மெட்ராஸ் ரேஸ் கிளப் ஆன்லைன் மூலம் நடத்திய தேர்தல் செல்லும். அந்த தேர்தல் முடிவை வெளியிடலாம். அதற்கு தடை எதுவும் இல்லை.

இவ்வாறு நீதிபதி கூறி உள்ளார்.


Next Story