கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்    இன்றும், நாளையும் நடைபெறுகிறது
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெற இருக்கிறது.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது.

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 1.1.2023-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணி மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, தற்போது அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பெயர் நீக்கம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அதற்குறிய படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைத்திட படிவம் 6 பி பூர்த்தி செய்து வழங்கலாம். அலுவலக வேலை நாட்களில் நடைபெறும் இந்த பணியானது வருகிற 8-12-2023 வரைக்கும் நடைபெற உள்ளது. இதுதவிர பொதுமக்கள் இணையதளம் (www.avsp.in) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு முகாம்

மேலும், இன்றும்(சனிக்கிழமை), நாளையும்(ஞாயிற்றுக்கிழமை) அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த சிறப்பு முகாம்கள் மாலை 5.30 மணி வரை நடைபெறும். எனவே இதில் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து பங்கேற்று பயனடையுங்கள். இதேபோன்று வருகிற 26 மற்றும் 27-ந்தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

மேலும், வாக்காளர் பட்டியல் தொடர்பாக தகவல்கள் ஏதும் தேவைப்பட்டால் அலுவலக வேலை நாட்களில் வேலை நேரங்களில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மைய தொலைபேசி எண்-1950 மற்றும் 04151-220200 என்கிற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளர்.


Next Story