வாக்காளர் பட்டியல் திருத்த முகாமை தேர்தல் மேற்பார்வையாளர் ஆய்வு
குமரி மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை தேர்தல் மேற்பார்வையாளர் ஜெயந்தி ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை தேர்தல் மேற்பார்வையாளர் ஜெயந்தி ஆய்வு செய்தார்.
வாக்காளர் பட்டியல்
குமரி மாவட்டத்தில் தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந் தேதியன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 1-1-2023-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியானவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பாக சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கடந்த வாரம் 2 நாட்கள் நடந்தது.
அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் சிறப்பு முகாம் நடந்தது. அப்போது பெயர் சேர்த்தல் தொடர்பாக 5,118 பேர் உள்பட மொத்தம் 7 ஆயிரத்து 572 பேர் விண்ணப்பம் அளித்திருந்தனர். அதைத்தொடர்ந்து நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது.
தோ்தல் பார்வையாளர் ஆய்வு
இந்த நிலையில் குமரி மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களை ஆய்வு செய்வதற்காக மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளராக ஜெயந்தி வந்தார். பின்னர் குளச்சல் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வில்லுக்குறி அரசு தொடக்கப்பள்ளியிலும், பத்மநாபபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட காட்டாத்துறை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அதன்பிறகு வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி னார். தேர்தல் மேற்பார்வையாளர் ஜெயந்தி பங்கேற்று ஆய்வு செய்தார்.கூட்டத்தில் வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், தனி தாசில்தார் (தேர்தல்) சுசீலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.