வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்
நாகை பகுதிகளில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமினை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகை பகுதிகளில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமினை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
நாகை நகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்தல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடந்தது. இந்த முகாமை கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்குள்ள அலுவலர்களிடம் பணி குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, நேற்று, இன்று (ஞாயிற்றுக்கிழமை), 26-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 நாட்கள் நாகை மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குசாவடி நிலையங்களிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும்; முகவரி மாற்றம் செய்திட சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.
சிறப்பு முகாம்
இச்சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்து கொள்ளலாம்.பொதுமக்கள் சிறப்பு முகாம் நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், மற்ற நாட்களில் உதவி கலெக்டர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் பூர்த்தி செய்த படிவங்களை வழங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நாகை நகராட்சிக்குட்பட்ட கோட்டைவாசல் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக நாகை அருகே மஞ்சக்கொல்லை ஊராட்சியில் உள்ள குமரன் உயர்நிலை பள்ளி, ஆழியூர் அரசு மேல்நிலைபள்ளி ஆகிய இடங்களில் நடந்து வரும் முகாம்களை பார்வையிட்டார்.