பொதுப் பயன்பாட்டுக்கு மின்சாரக் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8 வசூல்-ஆடிப்போன அடுக்குமாடி வாசிகள்
அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிநீர் மோட்டார்கள், கார் நிறுத்தம், படிக்கட்டுகள் மற்றும் பொது இடங்களில் எரியும் மின்விளக்குகள், எந்திர 'லிப்ட்'கள் போன்றவைகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வீடுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தைக் காட்டிலும் இது கடுமையாக இருப்பதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள்.
மின்சாரக் கட்டண உயர்வு
புதிய மின்சாரக் கட்டண உயர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைமுறைக்கு வந்தது. நாம் கட்டுகிற மின்சாரக் கட்டணம், நமக்கு அரசு தருகிற மானியம் ஆகியவை மூலமாக தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.65 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது.
மின்சாரம் கொள்முதல் செய்வது, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவது போன்ற செலவினங்களுக்காக மின்வாரியத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.77 ஆயிரம் கோடி தேவைப் படுகிறது.
இவ்வாறு வரவுக்கு மீறி செலவாகிவருவதால் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் மின்வாரியம், சற்று அதில் இருந்து மீளுவதற்காக மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு மின்சார ஒழுங்கு முறை ஆணையமே முன்வந்து, 15 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி இருந்தது. அதன்பின்னர், எந்தவித கட்டண உயர்வும் செய்யப்படவில்லை.
தற்போது தமிழகத்தில் புதிய மின் கட்டணத்தை 34 சதவீதம் உயர்த்தி மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது. இந்த புதிய மின்கட்டண உயர்வால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள முதல் 100 யூனிட்டுகளுக்கு கட்டணம் கிடையாது. அதற்கு மேல் பதிவாகும் யூனிட்டுகளுக்கு உயர்த்தப்பட்ட இந்த புதிய மின் கட்டணம் பொருந்தும். இதனால் முன்பு இருந்த கட்டணத்தைவிட, குறைந்தது ரூ.100 முதல் ரூ.1,000-க்கு மேல் ஒவ்வொருவரும் அதிகமாகச் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது.
அடுக்குமாடி வாசிகள் ஆதங்கம்
இதில் இன்னும் ஒருபடி மேலாக, பொதுப் பயன்பாட்டிற்கு மின் இணைப்பைக் கொண்டிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு மேலும் அதிர்ச்சிதரும் வகையில் கட்டண உயர்வு அமைந்து இருக்கிறது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கடும் ஆதங்கத்தில் உள்ளனர்.
சென்னை உள்பட மாநிலம் முழுவதும், பல வீடுகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்புகளில் கூட்ட அறை, வாகன நிறுத்தங்கள், 'லிப்ட்', குடிநீர் மோட்டார் பம்ப், 'ஜிம்' போன்ற பொதுப் பயன்பாட்டுக்காக, தனி மின் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய மின் கட்டண உயர்வு வரும் வரை, இதுபோன்ற பொதுப் பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு, வீடுகள் போன்றே ஒரே சீரான மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதன்படி, முதல் 100 யூனிட் இலவசம். 500 யூனிட் வரை மானியக் கட்டணம் என்ற சலுகைகள் கிடைத்தன.
தற்போது இந்த பொதுப் பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு கட்டணச் சலுகை நிறுத்தப்பட்டு, வணிக ரீதியிலான கட்டணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் நிர்ணயித்து இருக்கிறது.
அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டிற்கான மின் இணைப்புக் கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.8-ம், நிரந்தர கட்டணமாக ஒரு கிலோ வாட்டுக்கு மாதம் ரூ.100-ம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதுவரைப் பொதுப் பயன்பாட்டிற்கு மின் இணைப்பில் எந்தவிதக் கட்டணமும் செலுத்தாமல் இருந்து வந்த நிலை மாறி, தற்போது வீடுகளுக்கான கட்டணத்துடன் கூடுதலாக இதையும் சேர்த்துச் செலுத்த வேண்டிய நிலைக்கு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வந்து இருக்கிறார்கள். இதில் சில அடுக்குமாடி குடியிருப்புகளில் சாதாரண மின் இணைப்புகளைக் கூட பொதுப் பயன்பாட்டிற்கான மின் இணைப்புகளாகக் கருதி, ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாயாகக் கணக்கிட்டு பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடும் எதிர்ப்பு
இதற்கு அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதோடு, இதற்கு மாற்று ஏற்பாட்டை அரசு செய்து தரவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் வசதி படைத்தவர்கள் என்ற மாயை இருக்கிறது. அவர்களுக்கு இந்தக் கட்டண உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது என்று நினைப்பது தவறு. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும், வங்கிக் கடன் பெற்று அதை ஒவ்வொரு மாதமும் கஷ்டப்பட்டு செலுத்திவருபவர்கள் என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது.
இந்த கட்டண உயர்வால் அவர்கள் மாதம் மாதம் செலுத்தும் பராமரிப்புச் செலவு கடுமையாக அதிகரித்து அவர்களை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. இதுபற்றி தர்மபுரி மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்கள் கூறியதாவது:-
குறைக்க வேண்டும்
கடத்தூரை சேர்ந்த புஷ்பாகரன்:-
5 வீடுகள் கொண்ட குடியிருப்பில் பொதுப் பயன்பாட்டு மின் இணைப்பு கட்டணமாக இதற்கு முன்பு ரூ.500 என்று இருந்த இடத்தில், தற்போது ரூ.2,500 வரை வருகிறது. இது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டுமல்ல, 2 அல்லது 3 வீடுகள் இருந்தால் கூட இதே நிலைதான் இருக்கிறது. வீட்டு பயன்பாட்டுக்கு உள்ள மோட்டாரை இயக்கினால் அது வணிக கட்டணம் என்பது எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது புரியவில்லை. எனவே அரசு ஏற்கனவே இருந்தபடி பொதுப் பயன்பாட்டிற்கும் கட்டணத்தை நிர்ணயித்து வசூலிக்க வேண்டும். வீடுகளுக்கான பொதுபயன்பாட்டு மின் கட்டண உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாடகைதாரர்களுக்கு பாதிப்பு
மாரண்டஅள்ளியை சேர்ந்த சரவணன்:-
நான் வசிக்கும் பகுதியில் குடியிருப்புகள், கடைகள் உள்ளன. இவற்றுக்கான தண்ணீர் பயன்பாட்டிற்கு தனியாக மின் மீட்டர் உள்ளது. தண்ணீர் பயன்பாட்டிற்கு வரும் மின் கட்டணத்தை வாடகைதாரர்கள் பங்கிட்டு வழங்குவது வழக்கம். தற்போது தண்ணீருக்கான பொது மின் இணைப்புக்குரிய கட்டணம் உயர்ந்து உள்ளது. முன்பு ரூ.400 வரை செலுத்தியவர்கள் இப்போது ரூ.1,200 வரை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே வாடகைதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
திரும்ப பெற வேண்டும்
மொரப்பூரை சேர்ந்த குடியிருப்பு உரிமையாளர் தினகரன்:-
அண்மையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பின்பு ஒரே வளாகத்தில் சில வீடுகள் கொண்ட குடியிருப்புகளில் குடிநீருக்கான மின் இணைப்பிற்கு மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 1 கிலோ வாட்டுக்கு ரூ.100 கூடுதல் என்று கூறுகிறார்கள். இந்த கட்டண உயர்வு குடியிருப்புகளின் உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தண்ணீரை வணிக நோக்கத்துடன் எடுத்து விற்பனை செய்பவர்களுக்கு கூடுதல் மின் கட்டணம் நிர்ணயம் செய்யலாம். சில வீடுகள் கொண்ட குடியிருப்புகளில் தண்ணீர் வீட்டு உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அங்கு வணிக நோக்கம் எதுவும் இல்லை. எனவே சில வீடுகள் கொண்ட குடியிருப்புகளுக்கு தண்ணீர் பயன்பாட்டுக்காக கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கும் முறையை திரும்ப பெற வேண்டும்.
கடுமையான பாதிப்பு
பாலக்கோட்டை சேர்ந்த குமார்:-
ஒரே இடத்தில் சில வீடுகள் கொண்ட குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு குடிநீர் இணைப்புக்கான மின் கட்டணம் அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இத்தகைய வீடுகளில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் தற்போது தண்ணீர் இணைப்பிற்கு கூடுதலாக மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது வாடகைதாரர்களை கடுமையாக பாதித்துள்ளது. பல இடங்களில் வீட்டு வாடகை உயர்த்தப்பட்டு வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு மின் கட்டணத்தை குறைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பெரிதும் பாதிக்கும்
இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்வது தவறு. மின்வாரியத்தின் வருவாய் சரியாக அரசிடம் வந்து சேர்ந்தால், நஷ்டம் என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. தற்போது பொதுப் பயன்பாட்டு மின் கட்டணம் நடைமுறைக்கு வந்திருப்பதால், மின்வாரியத்துக்கு 2 மாதத்துக்கு ஒரு முறை குறைந்தபட்சம் ரூ.15 கோடியும், அதிகபட்சம் ரூ.50 முதல் ரூ.54 கோடியும் வருவாய் கிடைக்கும். இதுதவிர, நிரந்தர கட்டணமாக ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.100 என்ற வீதத்தில் வரும் வருவாயும் தனியாக வரும். இது அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கியிருக்கும் நடுத்தர வர்க்க மக்களை பெரிதும் பாதிக்கும். ஏராளமான வீடுகள் கொண்ட சில அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்தக் கட்டண உயர்வால், பராமரிப்பு செலவை ஒரு சதுர அடிக்கு ஒரு ரூபாய் அதிகரித்துவிட்டனர்' என்றனர்.
சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டும் அல்ல சிறு நகரங்களில்கூட அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகி வருகின்றன. குழுக்களாக வீடுகள் கட்டி வாடகைக்கும் விடுகிறார்கள். இந்த புதிய மின்கட்டண முறையால் அங்கு குடியிருக்கும் வாடகைதாரர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.