மின்சார மோட்டார் வயர் திருட்டு
எரியோடு அருகே மின்சார மோட்டார் வயர் திருடு போனது.
வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டில் கரூர் சாலையில் பேரூராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு மர்ம நபர்கள் 2 பேர் மின்சார வயர்களை எரித்து காப்பர் கம்பிகளை தனியாக பிரித்து கொண்டிருந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், எரியோடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையில் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் ஆத்தூர் பிள்ளையூரை சேர்ந்த பாத்திர வியாபாரி ஆறுமுகம் (வயது 38), டொக்குவீரன்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜா (54) என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், ஆர்.புதுக்கோட்டை, திருமண்செட்டியூர், கருங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய கிணற்றில் பொருத்தப்பட்டுள்ள மின்மோட்டார்களில் இருந்த வயர்களை திருடி அவற்றை தீ வைத்து எரித்து காப்பர் கம்பிகளை எடுத்து விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.