மண் லாரி மோதி மின்கம்பம் சேதம்


மண் லாரி மோதி மின்கம்பம் சேதம்
x

பழனி அருகே, லாரி மோதி மின்கம்பம் சேதம் அடைந்ததை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

பழனி அருகே, கொடைக்கானல் சாலையில் ஒத்தக்கடை பகுதி உள்ளது. இங்குள்ள தோட்ட பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். மண் ஏற்றி வந்த லாரி ஒன்று, ஒத்தக்கடை பகுதியில் உள்ள மின்கம்பத்தில் நேற்று மோதியது. இந்த விபத்தில் மின்கம்பம் முற்றிலும் சேதமானது. அந்த சமயத்தில், மின்கம்பம் அருகே சிலர் நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்தநிலையில் மண் லாரி மோதி மின்கம்பம் சேதமடைந்ததை கண்டித்து ஒத்தக்கடை கிராம மக்கள், கொடைக்கானல் சாலையில் திரண்டு திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த பழனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுதொடர்பாக கிராம மக்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக கொடைக்கானல் சாலையில் மண் லாரிகள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் குழந்தைகள், முதியோர்கள் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே வேகமாக செல்லும் மண் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story