போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பங்களை மாற்ற வேண்டும்


போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பங்களை மாற்ற வேண்டும்
x

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என மாதாந்திர சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என மாதாந்திர சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

மாதாந்திர ஆய்வு கூட்டம்

சாலைப்பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிக விபத்துகள், தொடர் விபத்துகள் நடைபெறும் இடங்களில் விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும். ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டியதாக கடந்த ஜூன் மாதம் ரூ.31 லட்சத்து 12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தேரேகால்புதூர்- வெள்ளமடம் சாலை, திருப்பதிசாரம்- குமாரபுரம் நான்கு வழிச்சாலை மற்றும் இதர பகுதிகளில் சாலையின் ஓரங்களில் தெருவிளக்குகள் அமைப்பதற்கு அந்தந்த உள்ளாட்சி துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை பலகை

சாலையோரங்கள், முக்கிய சந்திப்பு போன்ற பொது இடங்களில் பேனர்கள், அலங்கார வளைவுகள் வைப்பதை கண்காணித்து அப்புறப்படுத்த தொடர்புடைய உள்ளாட்சி அலுவலர்கள் போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்கள் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சாலை விதிகளை பின்பற்றியும், மிதமான வேகத்துடனும் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும்.

இணைப்பு சாலை பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். மாநகரப்பகுதிகளில் வாகன நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் பால்பண்ணை சந்திப்பு, ராமன்புதூர் சந்திப்பு, வெட்டூர்ணிமடம் சந்திப்பு ஆகிய இடங்களில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு மாற்று ஏற்பாடு செய்து தர மாநகராட்சி ஆணையரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்கம்பங்களை மாற்ற வேண்டும்

அருமனை சந்திப்பின் அருகில் நடைபாதையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்கள் வைப்பதை தடுக்க வேண்டும். விபத்து ஏற்படும் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்ட நபர்கள் இருசக்கர வாகனத்தை இயக்க கூடாது. சாலை ஓரங்களில் கார், லாரி போன்ற வாகனங்களை தேவையின்றி நிறுத்துவதை தவிர்க்கவும்.

இவ்வாறு ஸ்ரீதர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் பாஸ்கரன், கூடுதல் கோட்டப்பொறியாளர் (சாலை பாதுகாப்பு) சசிகலா, வட்டார போக்குவரத்து அலுவலர் சசி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story