நாமக்கல் பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கிளை விழுந்து மின்கம்பம் சேதம்-மின்தடையால் குடிநீர் வினியோகம் பாதிப்பு


நாமக்கல் பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கிளை விழுந்து மின்கம்பம் சேதம்-மின்தடையால் குடிநீர் வினியோகம் பாதிப்பு
x

நாமக்கல் பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மின்கம்பம் சேதமடைந்தது. இதனால் ஏற்பட்ட மின்தடையால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

நாமக்கல்

நாமக்கல்:

மரக்கிளை முறிந்து விழுந்தது

நாமக்கல் நகரில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. காற்று வேகமாக வீசியதால் நகரின் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. நாமக்கல்லில் பரமத்தி சாலையில் உள்ள பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள, ஒரு மரத்தின் கிளை முறிந்து, மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதில் மின் கம்பம் முழுமையாக சேதம் அடைந்தது. மேலும் 22 ஆயிரம் வோல்டேஜ் செல்லும் மின்பாதையில் மரத்தின் கிளை முறிந்து விழுந்ததால், உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து அங்குள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் நகராட்சி வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை.

குடிநீர் வினியோகம்

இது பற்றி தகவல் அறிந்த நகராட்சி ஆணையாளர் சுதா, தலைவர் கலாநிதி உள்ளிட்டோர் பழைய நகராட்சி அலுவலகம் வந்து ஆய்வு செய்தனர். இதையடுத்து முறிந்து விழுந்த மரக்கிளைகளை உடனடியாக அகற்ற நகராட்சி பணியாளர்களுக்கு ஆணையாளர் உத்தரவிட்டார். பின்னர் மின்வாரிய பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, உடைந்த மின்கம்பத்தை மாற்றி, டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்தனர்.

தொடர்ந்து குடிநீர் வினியோகத்துக்கு தேவையான மின் இணைப்பு சரி செய்யப்பட்டது. இதையடுத்து அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து நகரின் மற்ற இடங்களில் உள்ள குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.


Next Story