மின்கம்பி அறுந்து விழுந்து விவசாயி சாவு
கும்பகோணம் அருகே வயலில் மருந்து தெளித்துக்கொண்டிருந்த போது மின்கம்பி அறுந்து விழுந்து விவசாயி உயிரிழந்தார்.
திருவிடைமருதூர்,
கும்பகோணம் அருகே வயலில் மருந்து தெளித்துக்கொண்டிருந்த போது மின்கம்பி அறுந்து விழுந்து விவசாயி உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி சாவு
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வேப்பத்தூர் தெற்கு சோழியதெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி(வயது53). விவசாயியான இவர் நேற்று காலை திருவிசநல்லூர் காருடையான் தெரு அறிவழகன் என்பவர் வயலில் பூச்சி மருந்து அடித்துக்கொண்டிருந்தார்.அப்போது மேலே சென்ற மின் கம்பி திடீரென அறுந்து கணேசமூர்த்தி மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி வயலிலேயே கணேசமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்து கிடந்தது தெரிய வந்தது
இந்த நிலையில் அறிவழகனின் மனைவி மீனா வயலில் மருந்து அடிக்கும் பணி நடைபெறுகிறதா? என்பதை பார்க்க வந்துள்ளார். அப்போது கணேசமூர்த்தியை காணவில்லை. மேலும் மின் கம்பி அறுந்து தொங்குவதை பார்த்த அவர் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்தனர். இதன் பின்புதான் மின்சாரம் தாக்கி ஸ்பிரேயருடன் கணேசமூர்த்தி இறந்து கிடந்தது தெரிய வந்தது.
பிரதே பரிசோதனை
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவிடைமருதூர் போலீசார் கணேசமூர்த்தி உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி இறந்த கணேசமூர்த்திக்கு பவானி என்ற மனைவியும் 4 மகள்களும் உள்ளனர்.வயலில் பூச்சி மருந்து அடித்தபோது மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.