விவசாயி மின்சாரம் தாக்கி சாவு
மன்னார்குடி அருகே வயலில் தேங்கிய மழைநீரை வடிய வைக்க சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மன்னார்குடி;
மன்னார்குடி அருகே வயலில் தேங்கிய மழைநீரை வடிய வைக்க சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
விவசாயி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டை தோப்பு தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன்(வயது 63). விவசாயி. கடந்த சில தினங்களாக மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.நேற்று காலை சுப்ரமணியன் தனது வயலில் தேங்கிய மழை நீரை வடிய வைப்பதற்காக வயலுக்கு சென்றார். அப்போது வயல் அருகே சென்ற மின்கம்பி சாலையில் அறுந்து கிடந்தது.
மின்சாரம் தாக்கி சாவு
இதை கவனிக்காத சுப்பிரமணியன் எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தார். இதனால் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த பரவாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நிவாரணம் வழங்க கோரிக்கை
இந்த நிலையில் விவசாயி சுப்பிரமணியன் உடல் வைக்கப்பட்டிருந்த மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரி முன்பு அவரது உறவினர்களும், விவசாயிகள் சங்கத்தினரும் திரண்டனர்.அவர்கள், மின்சாரம் தாக்கி இறந்த கப்பிரமணியன் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து போலீசாரும், அதிகாரிகளும் உாிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அங்கு கூடியிருந்தவர்களிடம் உறுதி அளித்தனா். இதைத்தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரி முன்பு சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.