மின் கழிவுகளை அங்கீகரிக்கப்பட்ட பிரித்தெடுப்போரிடம் ஒப்படைக்க வேண்டும்-பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மின் கழிவுகளை அங்கீகரிக்கப்பட்ட பிரித்தெடுப்போர் மற்றும் மறுசுழற்சி செய்பவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி அறிவுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின் கழிவுகள்
இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சக மின் கழிவு விதிகளின் படி, மின் கழிவுகளை அங்கீகரிக்கப்பட்ட பிரித்தெடுப்போர், மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் மின் கழிவு புதுப்பிப்பாளர்களால் மட்டுமே சேகரித்து செயலாக்க முடியும்.
மேலும் மாசுகட்டுபாடு வாரியத்திடம் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு சான்றிதழ் பெற்ற உற்பத்தியாளர்கள் மின் கழிவுகளை சேகரித்து, அதனை அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவுகளை பிரித்தெடுப்போர், மின் கழிவுகளை மறு சுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவு புதுப்பிப்பாளர்களுக்கு அனுப்ப வேண்டும்.
அபராதம்
மின்னனு கழிவு (மேலாண்மை) விதியின் படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கைவிடப்பட்ட மின் கழிவு பொருட்களைச் சேகரித்து, அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவுகளை பிரித்தெடுப்போர்கள் அல்லது மின் கழிவுகளை மறு சுழற்சி செய்பவருக்கு அனுப்ப வேண்டும். முறைசாரா வர்த்தகம், அறிவியல் பூர்வமற்ற செயலாக்கம் மற்றும் மின்கழிவுகளை எரித்தல் போன்ற சம்பவங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுமக்களின் குறைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் மூலம் மின் கழிவுகளை அறிவியல் பூர்வமற்ற முறையில் பதப்படுத்துதல் மற்றும் எரித்தல் ஆகியவை மனித ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. மின்னனு கழிவு விதிகள் மீறப்பட்டால், மின் பொருள் உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், மின் கழிவு இடமாற்றம் செய்வோர், பிரித்தெடுப்போர் மற்றும் மறுசுழற்சி செய்வோர் ஆகியோருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ் தமிழ்நாடு மாசுகட்டுபாடு வாரியத்தால் அபராதம் விதிக்கப்படும்.
ஒப்படைக்க வேண்டும்
எனவே, இவ்வகையான செயல்களில் ஈடுபடும் மின்கழிவு கையாளுபவர்கள் மீது சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் படி, அந்நிறுவனத்தை மூடிடவும் அல்லது அந்நிறுவனத்தில் மின்சாரம், நீர் அல்லது வேறு ஏதேனும் சேவையை நிறுத்தவும் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும்.
மேலும், பொதுமக்கள் சட்டவிரோதமாக அல்லது முறைசாரா செயலாக்கத்தை தடுக்கும் பொருட்டு மின் கழிவுகளை அங்கீகரிக்கப்பட்ட பிரித்தெடுப்போர் மற்றும் மறுசுழற்சி செய்பவர்களிடம் திரும்ப ஒப்படைக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.