ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் கணக்கீட்டாளர் கைது


ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் கணக்கீட்டாளர் கைது
x

வீட்டு மின் இணைப்பை வணிக பயன்பாட்டுக்கு மாற்றிக்கொடுக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் கணக்கீட்டாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

வீட்டு மின் இணைப்பை வணிக பயன்பாட்டுக்கு மாற்றிக்கொடுக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் கணக்கீட்டாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

மின் இணைப்பை மாற்ற லஞ்சம்

திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 33). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு உறையூர் சவேரியார் கோவில் தெருவில் சொந்தமாக வீடு உள்ளது. அந்த வீட்டை மருத்துவமனை நடத்த வாடகைக்கு விட்டுள்ளார். இதன் காரணமாக தனது வீட்டின் மின் இணைப்பினை வீட்டு மின் இணைப்பில் இருந்து வணிக மின் இணைப்பாக மாற்றுவதற்கு தென்னூர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு உறையூர் பகுதிக்குரிய கணக்கீட்டாளர் ஜெயச்சந்திரன் (56), வீட்டு மின் இணைப்பை வணிக மின் இணைப்பாக பயன்படுத்தியுள்ளீர்கள். இதற்கு ரூ.80 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும். அவ்வாறு செய்யாமல் இருக்க வேண்டுமானால் ரூ.15 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

மின் கணக்கீட்டாளர் கைது

அதற்கு சந்தோஷ் தான் ஏற்கனவே மின் இணைப்பை மாற்றம் செய்வதற்கு மனு அளித்துள்ளதாகவும், அந்த மனுவின் அடிப்படையில் மின் இணைப்பை மாற்றி கொடுக்குமாறு கேட்டுள்ளார். மேலும், அவர் தன்னால் அவ்வளவு பணம் தர முடியாது என்றும் கூறி உள்ளார். இதையடுத்து ரூ.15 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம் குறைத்து கொண்டு, ரூ.12 ஆயிரம் தரும்படி கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்தோஷ் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் வழக்குப்பதிவு செய்தார். இதையடுத்து சந்தோஷுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த ஆலோசனையின்படி, தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்த ஜெயச்சந்திரனிடம் சந்தோஷ் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.12 ஆயிரம் லஞ்சப்பணத்தை கொடுத்தபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.


Next Story