திறந்த நிலையில் மின் பெட்டி
நாகை புதிய கடற்கரையில் திறந்து கிடக்கும் மின்சார பெட்டியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நாகை புதிய கடற்கரையில் திறந்து கிடக்கும் மின்சார பெட்டியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
புதிய கடற்கரை
நாகையின் பொழுதுபோக்கு அம்சமாக புதிய கடற்கரை உள்ளது. வேளாங்கண்ணிக்கு அடுத்தபடியாக விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய கடற்கரையாகவும் உள்ளது.
இங்கு காலை, மாலை நேரங்களில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். புதிய கடற்கரை பாதுகாப்புக்காக கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அங்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. காலப்போக்கில் இங்குள்ள புறக்காவல் நிலையம் செயல்படாமல் போனதால், இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் உள்ளிட்டவற்றை சமூக விரோதிகள் சேதப்படுத்தி வந்தனர்.
ஆபத்தான மின்சார பெட்டி
இதையடுத்து பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததின் பேரில் தற்போது புதிய கடற்கரையில் உள்ள புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டு, அங்கு ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடற்கரையில் உள்ள உயர் கோபுர மின்விளக்குக்காக பயன்படுத்தப்படும் மின்சாரப்பெட்டி திறந்த நிலையில் காணப்படுகிறது. அதில் உள்ள ஒயர்கள் வெளியே தெரிவதால், கடற்கரைக்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.
அந்த வழியாக நடை பயிற்சி செய்பவர்களும் அச்சத்தில் உள்ளனர். எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் புதிய கடற்கரையில் ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கும் மின்சார பெட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.