247 குவாரிகளில் மின் இணைப்பை துண்டிக்க பரிந்துரை


247 குவாரிகளில் மின் இணைப்பை  துண்டிக்க பரிந்துரை
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட 247 குவாரிகளில் மின் இணைப்பை துண்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட 247 குவாரிகளில் மின் இணைப்பை துண்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.

ஆய்வு

தமிழ்நாடு சட்டபேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையிலான குழு உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), பூண்டி கலைவாணன் (திருவாரூர்), ராஜா (சங்கரன்கோவில்), ராஜமுத்து (வீரபாண்டி) ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தனர். இவர்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் மதியழகன், ராமச்சந்திரன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சார்பு செயலாளர் பாலசீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, வேப்பனப்பள்ளி ஊராட்சி ஜீனூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் மா ஒட்டுச்செடி உற்பத்தி, ரோஜா, சாமந்தி, ஜெட்ரோபா உள்ளிட்ட மலர்கள் மற்றும் மாவட்டத்தில் அதிக அளவில் விளையக் கூடிய கேரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் உற்பத்தி செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மலர் ஏற்றுமதி, காய்கறிகள் ஏற்றுமதி செய்யும் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.

கூட்டம்

மேலும், குழி தட்டுக்கள் மூலம் மிளகாய், தக்காளி, செண்டுமல்லி நாற்றுகள் எந்திரம் மூலம் உற்பத்தி செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் பேரவை பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, உதவி கலெக்டர்கள் தேன்மொழி (ஓசூர்), சதீஸ்குமார் (கிருஷ்ணகிரி), நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன்,தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, கனிம வளத்துறை துணை இயக்குனர் வேடியப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் குழுவின் தலைவர் செல்வபெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

பரிந்துரை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 337 குவாரிகள் செயல்பட்டு கொண்டிருந்தது. இதில் 247 குவாரிகள் சட்டத்திற்கு புறம்பாக, சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் செயல்பட்டுள்ளதை, கலெக்டர் கண்டறிந்து தடை செய்துள்ளார். தற்போது அந்த குவாரிகளில் மின் இணைப்புகள் துண்டிக்க வேண்டும் என கலெக்டருக்கு பரிந்துரை செய்து உள்ளோம். மேலும் இந்த குவாரிகளில் தடை செய்வதற்கு முன்பாக எவ்வளவு மின் கட்டணம் செலுத்தி உள்ளனர்.

தற்போது எவ்வளவு மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் 90 குவாரிகளில் அரசு அனுமதித்த அளவை விட கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து கனிம வளத்துறை அலுவலர்கள் 3 மாதங்களுக்குள் அளவீடு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓசூர் மாநகராட்சியில் காவல்துறை ஆணையரகம் அமைக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story