தூக்குப்போட்ட மனைவியை காப்பாற்றி, எலக்ட்ரீசியன் தற்கொலை


தூக்குப்போட்ட மனைவியை காப்பாற்றி, எலக்ட்ரீசியன் தற்கொலை
x

பள்ளிகொண்டா அருகே கடன் தொல்லையால் தூக்குப்போட்ட மனைவியை காற்றிய எலக்ட்ரீசியன், தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

தூக்குப்போட்டார்

பள்ளிகொண்டாவை அடுத்த அகரம்சேரி முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 48), எலக்ட்ரீசியன். இவருக்கு மீனா என்ற மனைவியும், 19 வயதில் மகளும், 14 வயதில் மகனும் உள்ளனர். மீனா தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றார். முரளி குடும்ப செலவிற்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர் நேற்று காலை 7 மணியளவில் முரளியின் வீட்டுக்கு சென்று கடனை திருப்பி கேட்டு சத்தம் போட்டுள்ளார்.

இதனால் முரளி மற்றும் மீனா கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதில் மணமுடைந்த மீனா தற்கொலை செய்து கொள்ள தூக்குபோட்டுள்ளார். இதை பார்த்த முரளி மீனாவை மீட்டு சமாதானம் செய்துள்ளார்.

தற்கொலை

இந்த நிலையில் காலை 9.30 மணிக்கு முரளி வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், முரளி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி மீனா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story