2 மகள்களை தீ வைத்து எரித்து எலக்ட்ரீசியன் தற்கொலை;மனைவி வேலைக்கு சென்றது பிடிக்காததால் விபரீத முடிவு


2 மகள்களை தீ வைத்து எரித்து எலக்ட்ரீசியன் தற்கொலை;மனைவி வேலைக்கு சென்றது பிடிக்காததால் விபரீத முடிவு
x

இரணியல் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 2 மகள்களை தீ வைத்து எரித்து விட்டு எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார். மனைவி வேலைக்கு சென்றது பிடிக்காததால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்துள்ளார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

இரணியல் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 2 மகள்களை தீ வைத்து எரித்து விட்டு எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார். மனைவி வேலைக்கு சென்றது பிடிக்காததால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்துள்ளார்.

எலக்ட்ரீசியன்

குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள பரசேரி ராஜகோபால் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 48), எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி அனிதா (35). இவர்களுக்கு தன்சிகா (11), அஸ்மிதா (9) என்ற 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அருகில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பும், 2-வது மகள் 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். நாகராஜன் குடும்ப செலவுக்கு பணம் கொடுப்பது இல்லை. இதனால் அனிதா குடும்பத்தின் சூழ்நிலையை கருதி அருகில் உள்ள ஒரு பேக்கரிக்கு வேலைக்கு சென்று வருகிறார். அங்கு கிடைக்கும் பணத்தை வைத்து குழந்தைகளையும், குடும்பத்தையும் கவனித்தார்.

மனைவி வேலைக்கு செல்ல எதிர்ப்பு

ஆனால் அனிதா வேலைக்கு செல்வது நாகராஜனுக்கு பிடிக்கவில்லை. இந்த ஆதங்கத்தை மனைவியிடம் அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும் வீட்டு செலவுக்கு பணம் தேவை என்பதால் அனிதா வேலைக்கு செல்வதை நிறுத்தவில்லை.

தன்னுடைய பேச்சை மீறிய அனிதா மீது நாகராஜனுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இதனால் நாகராஜன் தினமும் மதுகுடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அடிக்கடி தகராறு

மேலும், செலவுக்கு பணம் இல்லாதபோது வீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்து விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து குடிப்பதை வாடிக்கையாக இருந்துள்ளார். இதன் காரணமாகவும் வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அனிதாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என மீண்டும் நாகராஜன் கூறியுள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் அனிதா வேலைக்கு சென்று விட்டார். இது நாகராஜனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இரவு 9 மணிக்கு வீட்டில் தன்சிகா, அஸ்மிதா மட்டும் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நாகராஜன் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். மனைவி இல்லாததை பார்த்து அவர் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார்.

குழந்தைகளை தீ வைத்து எரித்தார்

பின்னர் வீட்டை தீ வைத்து கொளுத்த வேண்டும் என்ற விபரீத எண்ணம் அவருக்கு உருவானது. இதற்காக வீட்டில் இருந்த துணிகளை எல்லாம் எடுத்து மொத்தமாக குவித்துள்ளார். அந்த சமயத்தில் தூங்கிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் மீதும் ஆடைகளை போட்டு மண்எண்ணெய்யை ஊற்றி கொல்ல துணிந்தார்.

நன்றாக தூங்கிக் கொண்டிருந்த தன்சிகா, அஸ்மிதா அசதியில் தந்தை செய்த கொடூரமான செயலை உணர முடியவில்லை. இந்தநிலையில் தான் பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல் அவர்கள் மீது தீயை பற்ற வைத்தார். இதனால் 2 குழந்தைகள் மீதும் தீப்பற்றி எரிந்தது. தீயில் கருகிய நிலையில் இருவரும் வலிதாங்க முடியாமல் அலறினர்.

தீக்குளித்து தற்கொலை

அதற்குள் நாகராஜனும் தனது உடல் மீது மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதற்கிடையே அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அங்கு உடல் கருகிய நிலையில் நாகராஜன் மற்றும் குழந்தைகள் 2 பேரும் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே நாகராஜன் பரிதாபமாக இறந்தார்.

இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதே சமயத்தில் உடல் கருகிய 2 குழந்தைகளுக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மூத்த மகளின் நிலைமை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இரணியல் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தைகளை தீ வைத்து எரித்து விட்டு எலக்ட்ரீசியன் தற்கொலை செய்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story