'மின் இணைப்புகளில் மின்கசிவு தடுப்பு கருவியை பொருத்த வேண்டும்'-மின்வாரிய அதிகாரி வேண்டுகோள்
‘மழை காலங்களில் மின்விபத்துகளை தடுக்க மின்இணைப்புகளில் மின்கசிவு தடுப்பு கருவியை பொருத்த வேண்டும்’ என்று மின்வாரிய அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்
'மழை காலங்களில் மின்விபத்துகளை தடுக்க மின்இணைப்புகளில் மின்கசிவு தடுப்பு கருவியை பொருத்த வேண்டும்' என்று மின்வாரிய அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து நெல்லை மண்டல மின்பகிர்மான தலைமை பொறியாளர் செல்வகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது-
மின்விபத்துகள்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தென்மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
எனவே பொதுமக்கள் மின்விபத்தை தடுக்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
காற்று மற்றும் மழை காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகே செல்ல வேண்டாம். மின்மாற்றிகள், மின்கம்பி, மின்கம்பங்கள் அருகே தண்ணீர் தேங்கி இருந்தால் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும். மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகே செல்லவோ அதனை தொடவோ கூடாது. உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மின்கசிவு
இடி, மின்னலின் போது வெட்ட வெளியிலோ மரங்களின் அடியிலோ, மின்கம்பங்கள், மின் கம்பிகள் அருகிலேயோ செல்ல வேண்டாம். இடி, மின்னலின் போது மின்சாதனங்கள், செல்போன் பயன்படுத்த கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல் மற்றும் கிரில் அருகே இருக்க வேண்டாம். மழையின் போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு இருந்தால் அங்கு மின் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
காற்று மற்றும் மழை காரணமாக மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் விழுந்தால் பொதுமக்கள் தாமாக சென்று அவைகளை அப்புறப்படுத்த முயற்சிக்க வேண்டாம். மின்வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். மின்கம்பங்களுக்கு போடப்பட்டு உள்ள ஸ்டே ஒயர்களில் ஆடு, மாடுகளை கட்டவோ, மின்கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமர்த்தவோ, மின்கம்பங்களை பந்தலாக பயன்படுத்தவோ கூடாது. ஸ்டே ஒயர்கள் மற்றும் சர்வீஸ் பைப்புகளில் கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவதை தவிர்க்க வேண்டும்.
அவசர உதவிக்கு...
மின்நுகர்வோர் இருப்பிடத்தில் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க அனைத்து மின் இணைப்புகளிலும் மின்கசிவு தடுப்பு கருவியை பொருத்த வேண்டும். இது மின் இணைப்புகளில் ஏற்படும் மின் கசிவினை கண்டறிந்து உடனடியாக மின்வினியோகத்தை நிறுத்தி மின்விபத்தை தடுக்க ஏதுவாக இருக்கும். விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும்.
மின்சார வேலி அமைப்பதனால் மனிதர்களும், வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளும் மின்விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும். விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைத்தால் சம்பந்தப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின்தடை தொடர்பான புகார்களுக்கும், இயற்கை இடர்பாடுகளின் போது அவசரகால உதவிக்கும் மின்வினியோகம் தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் 'மின்னகம்' மின் நுகர்வோர் சேவை மையத்தினை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.