மின்வாரிய ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்னூர்:
மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்த காலம் 3 வருடமாகியும், ஊதிய உயர்வை உடனடியாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசை கண்டித்தும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிடவும், மத்திய அரசு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மின்வாரிய சட்ட மசோதாவை அமல்படுத்த உள்ள நிலையில் அதற்கு முன்னதாக மின்வாரியத்தில் தமிழக அரசு அவுட்சோர்சிங் முறையில் தனியார்மயத்தை புகுத்தும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று மின்வாரிய அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்படி திருச்சியில் தென்னூர் மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் 120-க்கும் மேற்பட்டோர் பட்டை-நாமம் அச்சிடப்பட்ட பதாகைகளை கையில் வைத்துக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் செல்வராஜ், வட்ட தலைவர் நடராஜன், வட்ட பொருளாளர் பழனியாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.