அகதிகள் முகாம்களில் ஒரேநாளில் 179 வீடுகளுக்கு மின் இணைப்பு


அகதிகள் முகாம்களில் ஒரேநாளில் 179 வீடுகளுக்கு மின் இணைப்பு
x

சிவகாசி, ஆனைக்குட்டம் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் ஒரேநாளில் 179 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி, ஆனைக்குட்டம் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் ஒரேநாளில் 179 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

அகதிகள் மறுவாழ்வு முகாம்

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட ஆனைக்குட்டம் கிராமத்தில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமில் 179 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இவர்களுக்கு போதிய வீடுகள் இல்லாத நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு நிதி ஒதுக்கி 179 புதிய வீடுகளை கட்டி கொடுத்தது. இந்த பணி 90 சதவீதம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் இருந்த ஒரு சில வீடுகளுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக அவர்கள் அருகில் உள்ள வீடுகளில் இருந்தே மின்சாரம் பெற்று பயன் அடைந்ததாக கூறப்படுகிறது.

179 வீடுகளுக்கு மின் இணைப்பு

இந்தநிலையில் புதியதாக கட்டப்பட்ட 179 வீடுகளுக்கும் தனித்தனியாக மின் இணைப்பு கொடுக்க சிவகாசி மின் வாரிய அதிகாரி பாவநாசம் முடிவு செய்தார்.

அதற்கு தகுந்த படி சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து உரிய விண்ணப்பம் பெறப்பட்டது. பின்னர் அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்ட நிலையில் அதன் தொடக்கவிழா நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து தலைவர் முத்துராஜ், மின்வாரிய அதிகாரி பாவநாசம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தற்போது அகதிகள் மறுவாழ்வு முகாமில் உள்ள 179 வீடுகளுக்கும் ஒரே நாளில் மின்இணைப்பு வழங்கி மின் வாரியம் சாதனை நிகழ்த்தி உள்ளது. மின்வாரிய நிர்வாகத்தின் செயல்பாட்டை பொதுமக்கள் பாராட்டினர்.


Related Tags :
Next Story