புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து கிராம மக்களுக்கு மின் வினியோகம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கொத்தங்குடி அருகே புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து கிராம மக்களுக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டது.
மெலட்டூர்:
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கொத்தங்குடி அருகே புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து கிராம மக்களுக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டது.
பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, கொத்தங்குடி அருகே உள்ள குண்டூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென பழுதடைந்தது. இதனால் குண்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மின்வினியோகம் 3 நாட்களுக்கு தடைப்பட்டது.
இந்த டிரான்ஸ்பார்மர் சரிசெய்யப்படாததால் அப்பகுதியில் இயங்கி வரும் மின்மோட்டார்கள் இயங்காததால் குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதிப்பட்டனர். பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சரி செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து செய்தி 'தினத்தந்தி' நாளிதழில நேற்று முன்தினம் படத்துடன் வெளி வந்தது.
மின்வினியோகம்
இதன் எதிரொலியாக மின்வாரிய உயர் அதிகாரிகள் குண்டூர் பகுதியில் பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை அகற்றி விட்டு புதிதாக அமைக்க கிராம மக்களுக்கு மின்வினியோகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து மெலட்டூர் மின்வாரிய ஊழியர்கள் பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை அகற்றி விட்டு அங்கு புதிய டிரான்ஸ்பார்மரை அமைத்து மின்வினியோகம் வழங்கினர்.
உடனடியாக நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.