புதிய மின் இணைப்பு வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய என்ஜினீயர் கைது
புதிய மின் இணைப்பு வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய என்ஜினீயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
செங்குன்றம்,
சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(வயது 50). இவர், செங்குன்றம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி என்ஜினீயராக உள்ளார். இவரிடம் செங்குன்றத்தை அடுத்த புள்ளி லைன் புதுநகர் 5-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த பிரேம்சாகர்(41) என்பவர் தனது வீட்டுக்கு புதிய மின் இணைப்பு வழங்க கோரி விண்ணப்பம் செய்தார்.
அப்போது புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றால் ரூ.25 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் எனவும், முதல் கட்டமாக ரூ.15 ஆயிரம் தரும்படியும் பிரேம்சாகரிடம் உதவி என்ஜினீயர் கணேசன் வற்புறுத்தினார்.
மின்வாரிய என்ஜினீயர் கைது
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரேம்சாகர், இதுபற்றி திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கணேசனை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை பிரேம்சாகரிடம் கொடுத்து அதனை லஞ்சமாக கணேசனிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட பிரேம்சாகர், நேற்று செங்குன்றம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி என்ஜினீயர் கணேசனிடம் அந்த பணத்தை லஞ்சமாக கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்து நின்ற துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று கணேசனை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் சோதனை நடத்திய போலீசார், அவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.42 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.