பழங்குடியின கிராமத்துக்கு முதல் முறையாக மின்சார வசதி


பழங்குடியின கிராமத்துக்கு முதல் முறையாக மின்சார வசதி
x

கோத்தகிரி அருகே பழங்குடியின கிராமத்துக்கு முதல் முறையாக மின்சார வசதி வழங்கப்பட்டது. இதனை சப்-கலெக்டர் தொடங்கி வைத்தார்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே பழங்குடியின கிராமத்துக்கு முதல் முறையாக மின்சார வசதி வழங்கப்பட்டது. இதனை சப்-கலெக்டர் தொடங்கி வைத்தார்.

ஜமாபந்தியில் மனு

கோத்தகிரி இடுக்கொரை அருகே அணில்காடு கிராமம் உள்ளது. இங்கு பழங்குடியின மக்கள் 8 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு மின்சார வசதி இல்லாமல் இருந்தது. இதனால் அங்குள்ள மக்கள் சிரமப்பட்டு வந்தனர். மேலும் மின்சார வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த ஜூன் மாதம் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி தலைமையில் கோத்தகிரியில் நடந்த ஜமாபந்தியில் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து கிராமத்திற்கு மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு சப்-கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து அணில்காடு கிராமத்தில் புதிய மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு, அங்குள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்தநிலையில் சுதந்திர தினமான நேற்று முன்தினம் வீடுகளுக்கு மின் வினியோகம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மின் வினியோகம்

நிகழ்ச்சியில் குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர் பொந்தோஸ் ஆகியோர் கலந்துகொண்டு பழங்குடியின மக்களின் வீடுகளுக்கு மின் வினியோகத்தை தொடங்கி வைத்தனர். இதில் கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, கொணவக்கரை ஊராட்சி தலைவர் ஜெயபிரியா ஹரிகரன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாதன், உதவி பொறியாளர் கமல்குமார், வருவாய் ஆய்வாளர் அருண் மற்றும் வனத்துறை, வருவாய்த்துறை, மின்வாரிய அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

பழங்குடியின கிராமத்திற்கு முதல் முறையாக மின்சாரம் வினியோகிக்கப்பட்டு உள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story