மின்சாரம் தாக்கி மின்வாரிய அதிகாரி பலி
பறக்கை அருகே வீட்டில் குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்தபோது மின்சாரம் தாக்கி மின்வாரிய அதிகாரி பரிதாபமாக இறந்தார்.
மேலகிருஷ்ணன்புதூர்:
பறக்கை அருகே வீட்டில் குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்தபோது மின்சாரம் தாக்கி மின்வாரிய அதிகாரி பரிதாபமாக இறந்தார்.
மின்வாரிய அதிகாரி
பறக்கை அருகே உள்ள சி.டி.எம்.புரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது64). இவர் மின்வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவருக்கு சாந்தி (60) என்ற மனைவியும், அஜித் நிவாஸ்(34) என்ற மகனும் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராமகிருஷ்ணன் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீெரன அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் ராமகிருஷ்ணன் தூக்கி வீசப்பட்டார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராமகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு குடும்பத்தினர் கதறி அழுதனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீசில் புகார்
இதுகுறித்து அவரது மனைவி சாந்தி சுசீந்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா, சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
குளிர்சாதன பெட்டிைய சுத்தம் செய்தபோது மின்சாரம் தாக்கி மின்வாரிய அதிகாரி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.