மின்கட்டண அபராதத்தை ஆன்லைனில் செலுத்தக்கோரி ஆசிரியையிடம் ரூ.2¾ லட்சம் மோசடி
மின்கட்டண அபராதத்தை ஆன்லைனில் செலுத்தக்கோரி ஆசிரியையிடம் ரூ.2¾ லட்சம் மோசடி செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மின்கட்டண அபராதத்தை ஆன்லைனில் செலுத்தக்கோரி ஆசிரியையிடம் ரூ.2¾ லட்சம் மோசடி செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
செல்போனுக்கு குறுந்தகவல்
ஈரோடு மாநகராட்சியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியையின் செல்போனுக்கு கடந்த மாதம் 15-ந் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது.
அதில், மின் கட்டணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தாததால் உங்களது மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், அவர் ஏற்கனவே மின்கட்டணத்தை செலுத்தி விட்டதால், குறுந்தகவல் வந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அப்போது தொலைபேசியில் பேசிய நபர், வீட்டின் மின் இணைப்பை துண்டிக்காமல் இருக்க வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் லிங்கின் மூலமாக செயலியை பதிவிறக்கம் செய்து அபராத தொகையை மட்டும் செலுத்த வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து அந்த ஆசிரியை செயலியை பதிவிறக்கம் செய்து பார்த்தார். அப்போது ரூ.10 அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரூ.10 தானே செலுத்தி விடலாம் என்று ஆன்லைன் மூலமாகவே பணத்தை செலுத்த முயற்சி செய்து உள்ளார்.
ரூ.2¾ லட்சம்
ஆன்லைன் மூலமாக பணம் செலுத்துவதற்காக வங்கியின் விவரத்தையும், அதைத்தொடர்ந்து செல்போனுக்கு வந்த ஒருமுறை பாஸ்வேர்டையும் அவர் பகிர்ந்து உள்ளார். ஆனால் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 46 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. இதைப்பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார்.
இதுகுறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசுதா வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மூலமாக ரூ.2 லட்சத்து 46 ஆயிரத்தை மோசடி செய்த கும்பலை தேடி வருகிறார். இதுபோன்ற லிங்கை செல்போனுக்கு யார் அனுப்பினாலும் அதை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டாம் என்றும், உறுதிபடுத்தப்படாத ஆன்லைன் செயலியில் வங்கியின் விவரத்தை பகிர வேண்டாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.