கஜா புயலில் சேதமடைந்து சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பங்கள்:
கஜா புயலில் சேதமடைந்து சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பங்களால் ரெங்கராதபுரம் கிராமத்தில் 4 ஆண்டுகளாக வீடுகளை மின்கம்பிகள் உரசி செல்கிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டூர்:
கஜா புயலில் சேதமடைந்து சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பங்களால் ரெங்கராதபுரம் கிராமத்தில் 4 ஆண்டுகளாக வீடுகளை மின்கம்பிகள் உரசி செல்கிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கஜா புயலில் சாய்ந்த மின்கம்பங்கள்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 69 ரெங்கநாதபுரம் வடக்கு தெருவில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் விவசாய தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலால் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்படவில்லை.
69 ரெங்கநாதபுரம் பகுதியில் உள்ள 7 குடிசை வீடுகள், 4 மாடி வீடுகளில் மின்கம்பிகள் உரசி செல்கிறது .
மின்கம்பி உரசியதால் தீவிபத்து
இந்த மின்கம்பிகள் உரசியதால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு கூரைவீடும், 50 கட்டு வைக்கோல்களும் எரிந்தது. இதை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் பல முறை சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம், கிராம மக்கள் மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுகுறித்து ரெங்கநாதபுரத்தை சோந்்த ராஜேஸ்வரி கூறுகையில், கஜா புயலில் சேதம் அடைந்த மின்கம்பிகள் சாய்ந்த நிலையில் காணப்படுவதால் மின்கம்பிகள் வீட்டின் கூரையில் உரசி செல்கிறது. கடந்த 5 மாதங்களுக்கு முன் பலத்த காற்று வீசிய போது மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பொறி விழுந்து எனது கூரை வீடு எரிந்து விட்டது.
அச்சமாக உள்ளது
எனக்கு இதுவரை எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. தற்போது அதே இடத்தில் கூரை வீடு அமைத்து அதில் வசித்து வருகின்றேன். மழை மற்றும் காற்று வீசும் போது வீட்டில் இருக்கவே அச்சமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்றார்.
அந்த பகுதியை சேர்ந்த வேலாயுதம் கூறுகையில்,மத்திய, மாநில அரசுகளின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் தங்கள் இடத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டும் பணியில் ஈடுபட்டோம். கஜா புயலில் மின்கம்பம் சாய்ந்ததால் மின்கம்பிகள் வீட்டிற்கு மேலே செல்கிறது. இதனால் வீடு கட்டும் பணியை தொடர முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம்.
சீரமைக்க வேண்டும்
மின்கம்பிகள் வீட்டின் சுவர்களை உரசியபடி செல்கிறது. வீட்டில் மாடி பகுதிக்கு முதியவர்கள், குழந்தைகள் செல்லாமல் பாதுகாத்து வருகிறோம். எந்த நேரத்திலும் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய சூழலில் தான் ரெகுநாதபுரம் கிராம மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். எனவே உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்றார்.