மின் கட்டண உயர்வு மக்களை பாதிக்காது அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி


மின் கட்டண உயர்வு மக்களை பாதிக்காது  அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
x

மின் கட்டண உயர்வு

ஈரோடு

மின் கட்டண உயர்வு மக்களை பாதிக்காது என்று தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

மாமல்லபுரத்தில் நடக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி கோவை மாவட்டத்தில் இருந்து ஒலிம்பிக் ஜோதியின் மாதிரி சுடர் ஈரோடு மாவட்டத்தை வந்தடைந்தது. இதற்கான வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு ஒலிம்பிக் ஜோதியின் மாதிரி சுடரை வரவேற்று மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

மின் கட்டணம்

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் சுமார் 40 ஏக்கரில் மிக பிரம்மாண்டமாக உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதனால் ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் திட்டம் அங்கு மாற்றப்படுகிறது. உள்விளையாட்டு அரங்கில் பல்வேறு விளையாட்டுகளுக்கான அடிப்படை கட்டுமான வசதிகள் ஏற்படுத்தப்படும். தமிழக அளவில் அ.தி.மு.க. போராட்டம் நடத்தியது. ஆனால் அவர்களிடம் இருந்து பாராட்டை எதிர்பார்க்க முடியாது. மின் கட்டண உயர்வு மக்களை பெரிய அளவில் பாதிக்காது. இதனை மின்துறை அமைச்சர் விளக்கமாக கூறிஉள்ளார்.

தமிழகத்தின் நிதிநிலை எந்த அளவு உள்ளது என்று மக்களுக்கே தெரியும். அதனால் தான் வீட்டு வரி கூட உயர்த்தப்பட்டது. ஈரோடு நகரில் குடிநீர் 4 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறை வருவதாக அ.தி.மு.க.வினர் புகார் கூறுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் கடந்த முறை அ.தி.மு.க. ஆட்சியின்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதுதான். இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு குறைகளை களைய நடவடிக்கை எடுத்து வருகிறோம். பாதாள சாக்கடை திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதையெல்லாம் தற்போது சரி செய்து வருகிறோம்

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

செஸ் போட்டி

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பெருந்துறைரோடு, அரசு ஆஸ்பத்திரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வழியாக சென்று வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு நடந்த செஸ் போட்டியை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story